விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த முக்கிய பிரமுகர்கள்
- 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
- உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆதங்கம்.
நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னிலையில் அனைவரும் த.வெ.க.-வில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று கட்சியில் இணைந்த பிரபலங்கள் வருமாறு:-
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியன், ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி.ராமச்சந்திரன், நடிகை ரஞ்சனா நாச்சியார், டைரக்டர் ஜெகதீச பாண்டியன், புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் பாஸ்கரன், வேலா ராமமூர்த்தி மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க.வை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்கள்.
இணைந்தவர்களில் சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் 23-வது வார்டு கவுன்சிலர் ராஜனும் ஒருவர். இவர் காங்கிரசில் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரையும் காங்கிரஸ் கணக்கிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் இன்று ராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
த.வெ.க.வில் இணைந்தது குறித்து கவுன்சிலர் ராஜன் கூறும் போது," தமிழகத்தில் விஜய்யால் மட்டுமே மாற்று அரசியலை கொண்டு வர முடியும். எனவேதான் த.வெ.க.வில் இணைந்து உள்ளேன்" என்றார்.
இதேபோல் த.வெ.க.வில் இணைந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கி தட்டி கேட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
அவரும் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மாக இன்று இணைந்தார்.
த.வெ.க.வில் இணைந்தது பற்றி நடிகை ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது:-
நான் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர் சேதுபதி மகன் பாண்டி மகாராஜாவின் மூத்த பேத்தி. எங்களது மூதாதையரான வீரவேலு நாச்சியாரை த.வெ.க. கொள்கை தலைவராக அறிவித்த அன்றே த.வெ.க.-வுடன் மனப்பூர்வமாக பயணிக்க தொடங்கி விட்டேன்.
தமிழகத்தின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்றதும் பெண்களுக்கு முன்னுரிமை அல்ல சம உரிமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.