விசாரணைக்கு முந்தைய சிறை காலம் தண்டனை இல்லை - உச்ச நீதிமன்றம் கருத்து! பேராபத்து?
- இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது
- உச்சநீதிமன்றம் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை விட மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான்
நீதித்துறையின் பாரபட்சம்:
'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம், தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார்.
இதேபோல் உன்னா பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, டெல்லி ஐகோர்ட் ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.இதனையடுத்து செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண்கள் மீது கொடூர செயல்களை செய்ய நபர்களுக்கு கூட பலமுறை ஜாமின் தரும் இந்த நீதித்துறை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தராமல் இழுத்தடிப்பதும் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான் அநியாத்தின் உச்சக்கட்டம் ஆகும்.
நம் நாட்டில் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்கள் எத்தகைய கொடூர குற்றம் புரிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு எளிதாக பரோல் கிடைக்கிறது.
ஆனால் அதிகாரத்திற்கு எதிராக யாரவது இருந்தால் அவர்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்கலாம் என்ற பேராபத்து ஏற்பட்டுள்ளது.