இந்தியா

'விமர்சிப்பவர்களின் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்' - சட்டசபையில் மிரட்டல் விடுத்த ரேவந்த் ரெட்டி!

Published On 2026-01-05 15:32 IST   |   Update On 2026-01-05 15:32:00 IST
  • பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
  • ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை

தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, 

"தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார். 

தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை, 

"காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு. 

இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது. 

பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News