கொள்ளையடித்த நகையை பங்குபோடுவதில் தகராறு - வாலிபர் கொலை - 2 பேர் கைது
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் நவீன்குமார் (வயது 17). நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியில் சென்ற நவீன்குமார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தட்டான் மலை பகுதியில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. செங்கல்பட்டு டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக நவீன் குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், அபிஷேக் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடித்த நகையை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது என்றார்.
கொலையுண்ட நவீன் குமார் மற்றும் பிடிபட்ட அவரது நண்பர்கள் மீது பழைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. எனவே மனல் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #tamilnews