நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி இரண்டாம் நாள்- பிரம்மசாரிணி தேவிக்கு உகந்த நிறம்...

Published On 2025-09-23 07:15 IST   |   Update On 2025-09-23 07:15:00 IST
  • நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.
  • நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். மற்ற மூன்று நவராத்திரிகளை கடைப்பிடிக்காதவர்கள் புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.

நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

நவராத்திரியின் இரண்டாம் நாளும் துவிதியை திதியில் வரும் செவ்வாய்கிழமையான இன்று சிவனை பெற தவம் செய்த பராசக்தியின் வடிவமான பிரம்மசாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது. மேலும் பிரம்மசாரிணி தேவிக்கு ஜபமாலை, கமண்டலம் சின்னமாக கருதப்படுகிறது.



பக்தர்கள் சிவப்பு ரோஜாக்கள் அல்லது செம்பருத்தி இதழ்களைப் பயன்படுத்தி இல்லத்தில் ரங்கோலி கோலமிட்டும், சிவப்பு நிற மலர்களான ரோஜாக்கள் மற்றும் செம்பருத்திகளை கொண்டு அம்மனுக்கு வழிபாடு நடத்தலாம். 

Tags:    

Similar News