null
5 காதல் மொழிகள்! இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.
- காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
- தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.
காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.
வார்த்தை
நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
நேரம்
பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள்.
தொடுதல்
தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது.
எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்
துணைக்கு சேவை
சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.
பரிசு
உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.
இவை மட்டும்தான் காதல்மொழியா?
இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள்.