பொது மருத்துவம்
null

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் மதுபோதையில் இருப்பதற்கு சமம்!

Published On 2025-11-09 15:00 IST   |   Update On 2025-11-09 15:00:00 IST
  • போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது.
  • ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றும் ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள்.

எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடுபவர்கள்தான் மனித இனம். உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் உள்ளிட்ட நல்ல வாழ்க்கை முறைக்காகத்தான் அனைவரும் கடினமாக உழைப்போம். ஆனால் அந்த உழைப்பால் உணவு, உறக்கத்தையே மறந்துவிடுகிறோம். வேலை, குழந்தை, குடும்பம் என எது வேண்டுமானாலும் தூக்கத்திற்கும், உணவிற்கும் தடையாக இருக்கலாம். ஆனால் போதுமான தூக்கம் என்பது எடை, உணர்ச்சி, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன மற்றும் உடல் செயல்திறன் மற்றும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தூக்கம் ஒன்று கெடும்போது இது அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பது மிகமுக்கியான ஒன்று. இந்த தூக்கம் கெட்டால் என்ன ஆகும்? பார்க்கலாம். 

தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

  • வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
  • இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  • எடை மேலாண்மையை ஆதரிக்கிறது
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
  • கவனத்தின் அளவை அதிகரிக்கிறது
  • நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கிறது

பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது. எந்த இடையூறுகளும் இன்றி நாம் எவ்வாறு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதை பொறுத்தது. 

குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?

குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அவர்கள் தூக்கம் இருக்கவேண்டும்.

  • பிறந்த குழந்தைகள் : 14-17 மணிநேரம்
  • 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் : 12-16 மணிநேரம்
  • 1 முதல் 3 வயதுவரை உள்ள குழந்தைகள் : 11-14 மணிநேரம்
  • 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் : 10-13 மணிநேரம்
  • பள்ளி செல்பவர்கள் : 9-12 மணிநேரம்
  • பதின்பருவத்தினர் : 8-10 மணிநேரம்

இருண்ட அறையில் தூங்குவது அவசியம்

போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

  • இதய நோய்
  • புற்றுநோய் கட்டிகள்
  • பக்கவாதம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள்
  • கவனக்குறைவால் விபத்துக்கு வழிவகுக்கும்
  • நீரிழிவு நோய்
  • உயர் இரத்த அழுத்தம்

இரவில் சிறந்த தூக்கத்தை பெற என்ன செய்யலாம்?

  • இரவில் காபி, சர்க்கரை, மது எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
  • தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்கள், ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • விளக்கை அணைத்துவிட்டு தூங்குங்கள். காரணம் ஒளி நம் மூளையைத் தூண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, எனவே இருண்ட அறையில் தூங்குவது அவசியம்.
  • அலாரம் வைப்பதற்கு ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், கடிகாரத்தை பயன்படுத்துங்கள்.

தூக்கமின்மையின் பாதிப்புகள்

தூக்கமின்மை, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குடிபோதையில் இருப்பதற்கு சமம். போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறது. மேலும் தூக்கமின்மை மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற மிகவும் வலுவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.

Tags:    

Similar News