பொது மருத்துவம்
null

ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது!

Published On 2025-10-30 12:00 IST   |   Update On 2025-10-30 12:00:00 IST
  • உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும்.
  • உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும்.

மூன்று வேளையும் உணவு சாப்பிட்டாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் எந்த அளவு ஊட்டச்சத்துகள் உட்செல்கிறது என்பது மிகமிக முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால், எவ்வாறு உணவுமுறையை அட்டவணைப்படுத்தவேண்டும் என்பது குறித்து காண்போம்.  

நார்ச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கவும்

நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். அதுபோல அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும். சிலர் மாவுச்சத்துள்ள உணவுகள் கொழுப்பை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாவுச்சத்து உணவுகள் ஒரு கிராமுக்கு, கொழுப்பைக் காட்டிலும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் மாவுச்சத்துள்ள உணவுகளை சமைக்கும்போது அதோடு எதை சேர்க்கிறோம் என்பதை கவனிக்கவேண்டும். அதாவது உருளைக்கிழங்குடன் வெண்ணெய் அல்லது சீஸ் போன்றவற்றைச் சேர்க்கும்போது அதன் கலோரி அளவு அதிகரிக்கிறது.

நிறைய பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்

தினமும் குறைந்தது 5 விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அவை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ அல்லது உலர்ந்ததாகவோ எந்த விதத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதுபோல காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்.

மீன்கள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்

மீன் புரதத்தின் நல்ல மூலமாகும். இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு 2 முறையாவது மீன் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் எண்ணெய் மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிகமாக உள்ளது. இது இதய நோய்களை தடுக்க உதவும். சால்மன், வெங்கணை, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.


11 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தினசரி உணவில் 6 கிராமுக்கும் குறைவான உப்பே இருக்கவேண்டும்

நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரையை குறைக்கவும்

நமது உணவில் கொழுப்புச்சத்து இருப்பது அவசியம். ஆனால் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமானது. அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இதயத்தில் கொழுப்பை அதிகரிக்கும். இது இதய அபாயங்களுக்கு வழிவகுக்கும். ஆண்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது. பெண்கள் 20 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது உடல்பருமனுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நிறைந்த பானங்கள் அதிக ஆற்றலை கொண்டிருக்கும். அவை எடை அதிகரிப்பிற்கு பங்களிப்பதோடு, பல் சிதைவிற்கும் வழிவகுக்கும். சுகர் ஃப்ரீ சர்க்கரைகளும் உடலுக்கு நல்லதல்ல. பழங்கள் மற்றும் விதைகளில் இயற்கையாகவே சர்க்கரை இருந்தாலும், அவற்றின் நார்ச்சத்து காரணமாக அது உடனடியாக இரத்த ஓட்டத்தில் கலக்காது. 

குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்

அதிக உப்பு பயன்பாடு இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரியவர்கள் மற்றும் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. சிறுவயது குழந்தைகள் அதைவிட குறைவாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். உடற்பயிற்சி செய்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். அதுபோல எப்போதும் ஆரோக்கியமான எடையோடு இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது வகை 2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்காக மெலிந்து இருப்பதும் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் மிதமான, சராசரி எடையை நிர்வகித்து கொள்ளுங்கள்.

தண்ணீர்

நமது உடலே நமக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டும். தாகம் என மூளை சைகை கொடுக்கும்போதே தண்ணீர் குடிக்கவேண்டும். அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.

காலை உணவை தவிர்க்கவேண்டாம்

சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவு எடுத்துக்கொள்ளமாட்டார்கள். காலை உணவு சாப்பிடாவிட்டால் பல்வேறு விளைவுகளை உடல் சந்திக்கக்கூடும். அதனால் காலை உணவை தவிர்க்கமால் இருப்பது நல்லது. 

Tags:    

Similar News