null
ஆரோக்கிய உணவுகள் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல!
- ஒருவருக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழைப்பழங்கள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
"ஆரோக்கியமானது" என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு உணவும் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. ஒருவருக்கு உதவும் அதே ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றாடம் நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடிய சில உணவுகள் இதய அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.
வாழைப்பழம்...
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தசைகள் மற்றும் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள், ஸ்பைரோனோலாக்டோன், ARNI போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது பொட்டாசியம் இன்னும் இரத்தத்தில் சேரக்கூடும். அதிகப்படியான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உண்டாக்கி, மாரடைப்புக்கு வழிவகுக்கும். அதனால் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக அளவு வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
பசலைக்கீரை...
பசலைக்கீரை ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருந்தாலும், வாழைப்பழங்களைப் போலவே, இதிலும் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. இரத்த உறைதலை தடுக்கும் வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது. இதனை கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும், ரத்த உறைதல் அளவை கணிக்க முடியாது. அதனால் ரத்த உறைதல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரம்
சீமை அதிமதுரத்தில் கிளைசிரைசின் என்ற கலவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து பொட்டாசியம் அளவைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது
சோயா சாஸ்
சோயா சாஸால் ஒரு நாளைக்கு தேவையான சோடியத்தின் அளவை எளிதில் நிரப்பமுடியும். இதய செயலிழப்பு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் எடுத்துகொள்வது கூட நீர்தேக்கம், வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சோடியம் உட்கொள்ளல் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் அதிக வேலைகொடுக்கும். அவை ஏற்கனவே பலவீனமாக இருக்கும்போது இதை எடுத்துக்கொள்வது இன்னும் ஆபத்தானதாகும்.
ஆல்கஹால்
பலரும் வைன் குடிப்பது தீங்கு விளைவிக்காது என நினைத்தாலும், ஆல்கஹால் இதயத்திற்கு ஒரு நச்சுக்காரணி என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து மது அருந்துதல், இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இதய பிரச்சனை உள்ளவர்கள் மது அருந்தினால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
திராட்சை
திராட்சை சில மருந்துகளின் செயல்பாட்டை மாற்றக்கூடும். திராட்சையில் உள்ள சில ரசாயனங்கள், கல்லீரலில் உள்ள உள்ள CYP3A4 என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கும். இந்த நொதி நாம் எடுத்துக்கொள்ளும் பல்வேறு மருந்துகளை உடைத்து வெளியேற்ற உதவுகிறது. இந்த நொதியத்தின் செயல் தடுக்கப்படும்போது, மருந்து இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலந்து, உடலில் மிக நீண்ட நேரம் தங்கிவிடுகிறது. இதனால் மருந்துகளின் அளவு உடலில் அபாயகரமான அளவிற்கு அதிகமாகி, பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உங்களுக்கு பயத்தை உண்டாக்குவதற்காக இந்த தகவலை சொல்லவில்லை. ஒவ்வொருவரின் இதயமும் சிறுநீரகங்களும் ஊட்டச்சத்துக்களை வித்தியாசமாகக் கையாளுகின்றன. அதனால் உங்கள் உடல்நலனுக்கு எது சிறந்ததோ அதை அறிந்து உட்கொள்ளுங்கள். மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.