குழந்தை பராமரிப்பு

இளங்கலை விஸ்காம் படிப்பும், வேலை வாய்ப்பும்

Published On 2022-08-07 02:42 GMT   |   Update On 2022-08-07 02:42 GMT
  • பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
  • இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

விஸ்காம் என்பது விஷுவல் கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமாகும். விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை அறிவியல் (பி.எஸ்.சி.) என்பது மூன்று வருடப் பட்டப் படிப்பாகும். இந்த இளங்கலை பட்டப்படிப்பானது முழு நேரமுறையில் ஆறு மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் என்ற வகையில் ஆறு செமஸ்டர்களைக் கொண்டதாகும்.

இது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெகுஜன தொடர்பு படிப்புகளில் ஒன்றாக சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றது. பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் பாடநெறியானது பொது தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்தில் காட்சி மற்றும் எழுதப்பட்ட அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

இந்தப் பாடநெறியானது மாணவர்களுக்கு திரைப்படங்கள் மற்றும் ஊடகத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய செயல்முறைகள் பல்வேறு பட மற்றும் காணொளி தொகுப்பாக்க மென்பொருள், அனிமேஷன் மென்பொருள் மற்றும் எழுதுதல், பிற தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்துவதற்கு சிறந்த பயிற்சியை அளித்து அவர்களைத் திறமையானவர்களாக உருவாக்குகின்றன.

கல்வித்தகுதி

இந்த மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு +2வில் அறிவியலை முதன்மை பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் இப்பட்டப்படிப்பில் இணைவதற்கு தனியாக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

பாடங்கள்

மனித இணைப்பு, காட்சி எழுத்தறிவு, வரைதல், கலை மற்றும் அழகியல், திரைப்படக் கூறுகள், திரைப்படப் பாராட்டு, வானொலி பிரதிநிதித்துவம், விளம்பர அடிப்படைகள், ஸ்கிரிப்ட் எழுதுதல், கிராஃபிக் வடிவமைப்பு, விளம்பர படைப்பாற்றல், ஊடக கலாச்சாரம் மற்றும் சமூகம், விளம்பரத்தில் ஊடக திறன்கள், புகைப்படம் எடுத்தல், காட்சி அழகியல், நடிப்புத் திறன், காட்சி பகுப்பாய்வு, தொடர்பு கோட்பாடுகள், ஊடக ஆராய்ச்சி முறைகள், தொடர்பு மேம்பாடு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, காட்சிப்படுத்தல் மற்றும் விளக்கம், தொழில்முறை புகைப்படம் எடுத்தல், நகல் எழுதுதல், ப்ராஜெக்ட், ஆய்வு காகிதம் (ஸ்டடி பேப்பர்), கட்டுரைகள், இன்டர்ன்ஷிப், ஊடக விளக்கத்திறன்கள் மற்றும் ஊடக மேலாண்மை இவை அனைத்தையும் இந்த மூன்று வருட பட்டப் படிப்பானது மாணவர்களுக்கு பாடங்களாக வைத்து கற்றுத் தருகின்றது.

பி.எஸ்.சி. விஸ்காம் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு எம்.எஸ்.சி. வெகுஜன தொடர்பு (மாஸ் கம்யூனிகேஷன்), விஸ்காம், ஒளிபரப்பு, விளம்பரம், சந்தைப்படுத்தல், டிஜிட்டல் ஊடகம் போன்ற துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை படிக்கலாம். எம்.எஸ்.சி. மட்டுமல்லாமல் முதுகலை டிப்ளமோ படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். பி.எஸ்.சி. பட்டதாரிகள் முதுகலை எம்.பி.ஏ. படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு முக்கிய காரணம் எம்.பி.ஏ. முடித்தவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பும் உயர்ந்த ஊதியமுமே ஆகும்.

கற்பனை மற்றும் படைப்பாற்றல் குறைவான மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

வேலை வாய்ப்புகள்

* ஊடகத் தொழில் துறை

* திரைப்படத்துறை

* வீடுகளை வடிவமைத்தல்

* ப்ரொடக்ஷன் ஹவுசஸ்

* விளம்பரத்துறை

* தொலைக்காட்சி தயாரிப்பு

* வீடியோ கேமிங்

* வலைத்தளம்

பதவிகள்

* கிராபிக் ஆர்டிஸ்ட் - இவர்கள் காட்சி கருத்துக்களை கையால் அல்லது கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கி நுகர்வோரை வசீகரிக்கிறார்கள்.

* டெஸ்கிடாப் பப்ளிசர்ஸ் - கணினி மென்பொருளைப் பயன்படுத்தி செய்தித் தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் பிற பொருட்களுக்கான பக்க தாளவமைப்புகளை வடிவமைக்கின்றனர்.

* புகைப்படக் கலைஞர்

* அனிமேட்டர்

* கார்டூனிஸ்ட்

* வெப் டிசைனர்

இதுபோன்ற இன்னும் பல பதவிகள் இளங்கலை விஸ்காம் பட்டதாரிகளுக்கும் காத்துக் கிடக்கின்றன.

இத்துறையில் வேலைக்கு புதியதாக நுழைபவர்களுக்கு துவக்க வருமானம் குறைந்த அளவில் இருந்தாலும் ஆர்வமும், கற்பனைத் திறனும், அனுபவமும் அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News