குழந்தை பராமரிப்பு

இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

Published On 2023-04-02 04:57 GMT   |   Update On 2023-04-02 04:57 GMT
  • ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது.

ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது தமிழில் 'மதி இறுக்கம்' என்றழைக்கப்படுகிறது. ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது.

அதுவும் ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளின் பேச்சு, நடத்தை, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் சில செயல்களை மட்டும் திரும்ப, திரும்ப, செய்துகொண்டிருப்பார்கள். ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

அதில் 6 மாத குழந்தைக்கு அறிகுறியாக புன்சிரிப்பு இல்லாமல் இருத்தல், மற்றவர்களை கண்ணோடு கண் பார்க்காமல் இருத்தல் இருக்கும் 9 மாத குழந்தைக்கு அக்கம்பக்கத்தில் ஒலிக்கும் சத்தங்களை உணராமை, மற்றவர்களின் முகபாவனைகளை உணராமை போன்றவை இருக்கும். மேலும் தனியாக இருக்க விரும்புவது, பேசுவதில் தாமதம், பேசியதையே திரும்ப பேசுதல், ஒரு செயலை மீண்டும் செய்தல் ஆகியவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

கருவுற்ற பெண்கள் மன அழுத்தம், தைராய்டு பிரச்சினை, போலிக் அமிலம் குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வர வாய்ப்புள்ளதாம். ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்துவது சற்று கடினம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் குறைபாட்டை கண்டறிந்து டாக்டரின் வழிகாட்டுதல், தொடர் சிகிச்சைகளால் உடல்நலத்தில் பெரிய முன்னேற்றம் காணலாம். குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களை மிகுந்த அன்போடும், அக்கறையோடும் பெற்றோர் நடத்துவது அவசியம்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி பெற்றோர் நம்பிக்கையுடன் காட்டும் அக்கறையும் குணப்படுத்த வல்லது. இதற்கிடையே பெரும்பாலான மக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லை. அந்த வகையில் பொதுமக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமான இன்று அதனை பற்றி தெரிந்துகொண்டு ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ முன்வருவோம்.

Tags:    

Similar News