குழந்தை பராமரிப்பு

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம்

Published On 2023-04-29 04:32 GMT   |   Update On 2023-04-29 04:32 GMT
  • குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
  • குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

டாக்டர் உமாசங்கர், (இணை பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி):-

தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இளநீர், நுங்கு அதிகமாக கொடுக்கலாம். பொதுவாக குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் பெற்றோர்தான் அவர்களை கட்டாயப்படுத்தி தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

மேலும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரைதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்க்கலாம். எக்காரணத்தை கொண்டும் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்த அதிக குளிர்ந்த தண்ணீரை குடிக்க கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மண் பானை தண்ணீரை பயன்படுத்தலாம். அதிக வெயில் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சின்னம்மை ஆகிய நோய் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகளவில் தண்ணீர் குடித்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.

மெடிக்கல் எமர்ஜென்சி

டாக்டர் நம்பிராஜன், (இதயவியல் துறை தலைவர், அரசு ஆஸ்பத்திரி):-

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது சருமத்தில் ஒருவித வறட்சி ஏற்படும். இதன் தாக்கம் அதிகரிக்கும்போது தோல், சிவப்பாக மாறி மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்லும்.

இதுபோன்று ஏற்பட்டால் அது மெடிக்கல் எமர்ஜென்சி ஆகும். இந்த நேரத்தில் உடனடியாக அந்த நபரை நிழலில் அமர வைத்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு தண்ணீர் உள்பட எதுவும் குடிக்க கொடுக்கக்கூடாது.

மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நமது உடலில் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. அதை நாம் குடிக்காமல் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள செல் சுருங்கும். இதனால் இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக துடிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுதான் மாரடைப்புக்கு காரணம் ஆகும்.

தண்ணீர் முக்கியம்

இது தவிர சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற நோய் இருப்பவர்கள் அதிக வெயிலில் வெளியே செல்லக்கூடாது.

வெயில் நேரத்தில் அதிகளவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வெயிலுக்கு உடலுக்கு தண்ணீர்தான் முக்கியம். அதை தவறாமல் குடித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News