குழந்தை பராமரிப்பு

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு

Published On 2022-08-12 06:05 GMT   |   Update On 2022-08-12 06:05 GMT
  • பிள்ளைகளை ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அணுக வேண்டும்.
  • பெற்றோர் உறுதுணையாக இருப்போம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்திருக்கக் கூடாது.

அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உஷார்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,

வழக்கம் போல் உணவு உண்ணாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபம் அடையலாம், தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே திட்டவோ, அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.

எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விஷயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

'பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல' என தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்விஷயத்தில் 'கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்' என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விஷயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.

சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.

இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிகையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.

Tags:    

Similar News