குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகள்

Published On 2024-03-18 09:19 GMT   |   Update On 2024-03-18 09:19 GMT
  • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
  • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

வளர்பருவம்:

இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

 வைட்டமின் சி:

குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

 இரும்புச்சத்து:

குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

வைட்டமின் டி:

குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

 புரதம்:

வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

ஆரோக்கியமான கொழுப்பு:

சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

Tags:    

Similar News