குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தைக்கு ரத்த சர்க்கரை குறைவு உண்டாவது எப்படி?

Published On 2023-12-21 09:25 GMT   |   Update On 2023-12-21 09:25 GMT
  • பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது.
  • ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள்.

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.

கர்ப்ப காலத்தில், சிசுவின் ஆற்றல் குளுக்கோசால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவுக்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்கு தடைப்படுவதால், தன் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க, தன் கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்துக்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள், தாழ்வெப்பநிலை, பிறக்கும்போது மூச்சுத் திணறல், ரத்த ஓட்டக் குறைவு மற்றும் சுவாசக்கோளாறு இருக்கும் பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அட்ரீனல் பற்றாக்குறை, ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு, குளுக்ககான் குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

 பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம்.

நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

பிறக்கும்போது மூச்சுத்திணறல், மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News