வழிபாடு

சிம்ம, முத்துப்பந்தல் வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா

Published On 2023-09-21 04:55 GMT   |   Update On 2023-09-21 09:35 GMT
  • உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் பவனி.
  • விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

Similar News