வழிபாடு
null

2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

Published On 2026-03-05 11:45 IST   |   Update On 2026-03-05 11:49:00 IST
  • சிம்ம ராசியினருக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

ஆளுமைத் தன்மை நிறைந்த சிம்ம ராசியினரே

சிம்ம ராசியினருக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 2ம் மிடமாகிய தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் அதிபதியாகிய சனி எட்டாம் இடத்திற்கு செல்வதால் இது கெட்டவன் கெட்டிடில் கட்டிடும் ராஜயோகம் என்ற விபரீத ராஜயோகத்தை சிலருக்கு வழங்கலாம். அதே நேரத்தில் வாசகர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். விபரீத ராஜயோகத்தால் வரக்கூடிய எந்த பயன்களும் ஜாதகருக்கு பயன்படாது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த சில வருடங்களாக அனுபவித்த பிரச்சனைகளே சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும் போது அஷ்டமச் சனியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருக்கும்.மேலும் ஜூன் 2026 முதல் விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார் என்பதையும் மறக்கக்கூடாது.எந்த வகையில் பார்த்தாலும் சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அஷ்டமசனி காலத்தை கடத்த வேண்டும் என்பதில் மட்டும் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் 2026 நவம்பர் வரை ராசியில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் திட்டமிடுதல் நிதானம் தன்னம்பிக்கை தைரியம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளும் போது கிரகங்களால் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து விடுபட முடியும்.

அஷ்டம சனியின் பொதுவான பலன்கள்

பொதுவாக அஷ்டம சனி காலங்களில் பூர்வீ கத்தில் வசிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும். பூர்வீகத்தை விட்டு பிடிவாதமாக இருப்பவர்களை கூட சனி பகவான் இடமாற்றம் செய்ய வைத்து விடுவார்.தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக இக்கால கட்டத்தில் சிலருக்கு வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு , கோர்ட் கேஸ் பிரச்சனை வரும் . வம்பு வழக்கிற்கு நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம் தரும். அஷ்டம சனியால் நீதி மன்ற படி ஏறியவர்களுக்கு விவகாரத்து கிடைக்கும். மன நிம்மதிக்காக ஊரை விட்டு, மாநிலம் விட்டு தொலைதூரம் செல்லும் நிலை ஏற்படும். துன்பத்தாலும் துயரத்தாலும் வெறுப்படைந்து சிலர் சந்நியாசம் வாங்குவார்கள் அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ நேரும். உற்றார் உறவினர்களுக்கு ஜாமீன் போட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படும்.ஜாமீன் கையெழுத்து போடுதல், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எப்போதோ நடந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வந்து சிறை தண்டனை அனுபவிக்க நேரும்.

வீட்டில் எலக்ட்ரிக்கல் உபகரணங்களான பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, டிவி பழுதாகி அதிக செலவு வைக்கும்.வாகனங்களில் பயணம் செய்யும் போது அதிக கவனம் தேவை. சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களுக்கு தேவையான லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை முறையாக வைத்து இருக்க வேண்டும். அரசுக்கு தண்டம் கட்ட நேரலாம். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண கிடைக்கும். தவறான எதிர் பாலின நட்பை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி இழப்பு ஏற்படும். பலவித துன்பங்களை சந்தித்து மனம் அழுத்துப் போகும் காலம். எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள், மன உளைச்சலே மிஞ்சும். சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். ஆயுளுக்கு பங்கம் தரும் நோய் சிகிச்சை செய்பவர்கள் தினமும் மஹா மிருத்யஞ்ச மந்திர பாராயணம் செய்து துளசி தீர்த்தம் அருந்த நல்ல முன்னேற்றம் ஏற்படும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரும். முன்னோர் குல தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நற்பலன் மிகுதியாகும்.

சனியின் மூன்றாம் பார்வை பலன்கள்

அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் சனியின் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்திற்கு இருப்பதால் வானமே எல்லை என சுற்றித் திரிந்த நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி புதிய தொழில் ஒப்பந்தம் , முதலீட்டை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க கூடாது.தொழில் போட்டி கடுமையாக இருக்கும். வாடிக்கையாளரிடம் கனிவாக பழக வேண்டும். வாடிக்கையாளார்களிடம் கோபம் காட்டினால் வேறு நபரிடம் சென்று விடுவார்கள். அதனால் மனம் வருத்தம் கூட நேரும். முதலாளி தொழிலாளி பிரச்சனையால் உற்பத்தி குறையும். அரசின் சட்ட திட்டங்கள் சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் தொழில் கவுரவத்தை நிலைநாட்ட கடுமையான மன உளைச்சலை சந்திக்க நேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு 2 நபர்களின் வேலையை செய்ய நேரும். உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு . சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்தால் சிரமம் குறையும்.அரசு அதிகாரிகள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

சனியின் ஏழாம் பார்வை பலன்

சனி பகவானின் 7ம் பார்வை 2ம் மிடமான தனம், வாக்கு ,குடும்ப ஸ்தானத்திற்கு இருப்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும்.பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.பார்வை குறைபாட்டிற்காக அறுவை சிகிச்சை அல்லது கண்ணாடி அணிய நேரலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டி, அம்மா அப்பாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கும் மருந்துக்கும் வீண் செலவு ஏற்படும்.இதன் உச்சகட்டமாக குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவையும் சந்திக்க நேரும். கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ தம்பதிகள் பிரிந்து வாழலாம். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம்மிடத்திற்கு இருப்பதால் பூர்வீகம் தொடர்பான விசயங்களில் அதிரடி முடிவுகள் எடுக்காமல் இருப்பது நலம். முக்கியமாக தொழில் , சொத்து பாகப்பிரிவினை போன்ற விசயங்களை அஷ்டமச் சனி முடியும் வரை ஒத்திப் போட்டால் பாகப் பிரிவினை உங்களுக்கு சாதமாக கை கொடுக்கும். மேலும் கூப்பிட்ட குரலுக்கு உங்கள் குல தெய்வம் ஓடி வந்து நிற்கும்.இந்த சனிப் பெயர்ச்சியால் நீங்கள் அடையும் பெரும் பாக்கியம் குல தெய்வ அனுக்கிரகம் மட்டுமே.குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும்.பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் வயது மாணவ மாணவியர் தவறான நட்பு வலையில் சிக்கி வாழ்க்கையை கேள்விக் குறியாக்காமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைபடும். அந்நிய மொழிப் புலமை ஏற்படும். அந்நிய மொழிய கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். வேற்று மதத்தவரால் இன்னல்கள் ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும். வெளி நபர்களால் குடும்பத்தில் குழப்பம், சந்தேகம் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதால் மனதை கட்டுப்படுத்தி தெரியாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல் நலம்.

திருமணம்

அஷ்டமச் சனியின் காலத்தில் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு வம்பு வழக்கு மிகுதியாக இருக்கும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. சில தவறான காதல் கலப்பு திருமணம் செய்து மறு விவாகத்தை நோக்கி செல்வார்கள்.

பெண்கள்

கணவன் மனைவி இடையை நிலவிய சின்னச் சின்ன சலசலப்புகள் சீராகும். வீடு, அல்லது அலுவலகத்தை மாற்ற நேரும்.அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.வீடு, வாகனம் தொடர்பான உங்களின் எண்ணம் சிறு தடை, தாமதத்திற்கு பிறகே ஈடேறும். சொத்து தொடர்பான வழக்குகள் இருந்தால் இழுபறி இருந்து கொண்டே இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும்.சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

கண்ணியமான கன்னி ராசியினரே

கன்னி ராசிக்கு 5.6ம் அதிபதியான சனிபகவான் தற்போது கோட்ச்சாரத்தில் சம சப்தமஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் ராசியையும் 10ம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பார்ப்பார்.மேலும் 2026 ஜூன் மாதம் முதல் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று ராசிக்கு ஏழாம் இடத்தில் உள்ள சனியை பார்ப்பதால் கண்டகச் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். இந்த கண்டகச் சனியின் தாக்கத்தை குருபகவானின் அருட் கருணையால் உங்களுக்கு சாதமாக மாற்ற முடியும். சற்றேறக் குறைய கண்ட கச் சனி காலம் முடியும் வரை குருபகவான் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. கண்டகச் சனி மனித வாழ்வில் சோதனை மிகுந்த காலம். ஆயுள் தீர்க்கம் . ஜனன கால ஜாதகத்தில் சுப பலன் தரக்கூடிய கிரகங்களின் தசா புத்தி நடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லலாம். கணவன், மனைவி இருவருக்கும் சந்தேக குணம் இருந்து கொண்டே இருக்கும்.சிலர் மனைவியை கொடுமைப்படுத்தி இன்பம் காண்பர். வாழ்க்கை துணையால், திருமணத்தால் துன்பம் அடைந்தவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவி போல் வாழ நேரிடும். வாழ்க்கை துணையின் ஆரோக்யமும் பாதிப்படைந்தவாறே இருக்கும். சிலருக்கு தவறான எதிர் பாலின நட்பு ஏற்படும்.எதிர்காலத்தை பற்றிய பயஉணர்வு மிகுதியாகும். சிலர் பரிகாரம் என்ற மூட நம்பிக்கையால் மறு மாங்கல்யம் கட்டுவார்கள். மனித வாழ்க்கை என்பது கிடைப்பதற்கு அரியதான பொக்கிஷம். அதை கவனமாக கையாள வேண்டும். தவற விட்டால் சேதம் உங்களுக்கே என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு காலத்தை நகர்த்த வேண்டும்.

கண்டகச் சனியின் பொதுவான பலன்கள்

நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்ல வேண்டிய காலமாகும்.உடல் நலம் குறையும்.வைத்தியச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஒரு நோய்க்கு வைத்தியம் செய்து சீர் செய்யும் முன் அடுத்த நோய் வந்து விடும்.சாமனியர்களையும் நிலை தடுமாற வைக்கும் என்பதால் வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட வேண்டும். தவறான ஜாமின் கடன் பிரச்சனையை ஏற்படுத்தும். சொல்லாலும் செயலாலும் ஒன்ற முடியாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். புதிய வம்பு ,வழக்குகள் அவமானம் கதவை தட்டும். எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது நன்மை. பூர்வீகச் சொத்து, தொழில் வழக்குகள் உருவாகலாம். அதனால் அவமானம், தலைமறைவு வாழ்க்கை ஏற்படலாம். வருமான வரி , விற்பனை வரி தொடர்பான ஆவணங்களை முறையாக வைத்து இருக்க வேண்டும். பைனாஸ் நிறுவனம், சீட்டு நடத்துபவர்கள் , கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை . திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். உங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகவே இருக்கும். பிரயாணத்தில் பொருள் இழப்பு, திருட்டு போதல் ஏற்படும்.உடன் பிறந்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைத்த பணிகளால் இழப்பும், மன வருத்தமும் வரும். சகோதரரிடம் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் சகோதரர் மேல் தவறு இருந்தாலும் பலி உங்கள் மீதே விழும்.செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க நேரும். தன் நம்பிக்கை தைரியம் குறையும்.இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும். வேலையாட்களால் செலவும் கவுரக் குறையும் ஏற்படும். உங்களின் வலது கையாக பக்கமாக இருந்த உதவியாளரே உங்களுக்கு துரோகியாக மாறுவார். புதியதாக தேர்தலில் நிற்கும் எண்ணம் இருப்பவர்கள் அடுத்த சனிப்பெயர்ச்சி வரை இந்த எண்ணத்தை ஆறப் போடுவது நலம். யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தை எப்படி நல்ல பணமாக மாற்றுவது என்ற பயம் உங்களை ஆட்டுவிக்கும்.இடமாற்றம், வீடு மாற்றம் செய்ய நேரும். வலது காதில் செவித்திறன் குறைவு ஏற்படும். உடலின் வலப்புறம் வலி உணர்வு இருக்கும்.சிறு உடல் உபாதைகள், மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் மூன்றாம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் ஆன்மீக நாட்டம் மிகும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையை தூக்கிக் கொண்டு கோவில் குளம் என்று சுற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்களில் கலந்து கொள்வீர்கள். தான தர்மங்கள் செய்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் பிறக்கும். நதிகளில், கடல்களில் புனித நீராடல் செய்து பெரும் பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். மகான்களை தரிசிப்பது, சித்தர் ஜீவ சமாதிகளை போன்ற புண்ணிய வாய்ப்புகள் தேடி வரும். புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து மனம் ஆனந்தம் அடையும். சொத்து ,வியாபாரத்தை பிரித்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏன் பிறந்தேன்? .என் பிறப்பின் நோக்கம் என்ன? என் முன்னோர்கள் எனக்கு பாவம் சேர்த்துச் சென்றனரா? புண்ணியம் சேர்த்தவர்களா? என் சந்ததிகளை முன்னோர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? போன்ற கேள்விக்கு விடை காண முயல்வீர்கள். குல தெய்வம், பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நோயின் தன்மை புரியும். பூர்வீக தொழிலால் மிகப் பெரிய கெளரவம் கிடைக்கும்.சிலர் பூர்விக சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.

சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனத்தில் வெறுமை குடிபுகும். இது என்ன வாழ்க்கை என என்ற எண்ணம் ஏற்படும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும்.முகத்தில் கவலை, துக்கம் நிறைந்து இருக்கும். தோற்றப் பொழிவு குறையும். முடி நரைக்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் தோன்றும்.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள். அதிர்ஷ்டம் என்னை தேடி வருமா? என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவீர்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத முன்னோர் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவீர்கள்.எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்து செயல்பட்டு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த நீங்கள் உலக மாற்றத்தை கண்டு புதிய வழிகளை தேடி சிந்திப்பீர்கள். இள வயது கன்னி ராசி வாலிபர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி பெற்றோர், உற்றார் உறவினரிடம் கெட்ட பெயர் எடுப்பீர்கள்.உடல் சோர்வு , கை, கால் , மூட்டு வலி மிகுதியாகும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை சுக ஸ்தானமான 4ம் இடத்தில் பதிவதால் தாயின் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். வாகனம், நகைகள், விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.நிலம் விற்றல் , வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு தேடி வரும். பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் அல்லது ஆழ் துளை கிணறு அமைப்பீர்கள். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டை விரிவுபடுத்தவும். பராமரிப்பு செலவு மிகும். ஒரு சிலர் வசதி குறைவான வாடகை வீட்டிற்கு செல்ல நேரும். வாகனம் பழுதாகி அதிக செலவை இழுத்து வைக்கும்.பழைய வாகனங்கள் வாங்குபவர்கள் தரம் இல்லாத பொருளுக்கு அதிக பணம் செலவு செய்வீர்கள். மாணவர்கள் தேவையில்லாத சிந்தனையில் மனதை சிதற விடாமல் இருப்பது. நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஞாபகக் குறைவு அதிகமாகும். மேம்போக்காக படித்தால் மனதில் நிற்காது.பலமுறை படித்தால் மட்டுமே மனதில் பதியும்.

திருமணம்

கோட்ச்சார குரு பகவான் மிகச் சாதகமான நிலையில் இருப்பதால் ஜூன் 2026க்கு மேல் லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால் கண்டக சனியின் பாதிப்பு குறைந்து திருமண தடை அகலும். மேலும் அடுத்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு அஷ்டமசனி ஆரம்பிக்கும் என்பதால் திருமணம் தொடர்பான உங்கள் சுயசாத ரீதியான தோஷங்களை அறிந்து அதற்கான பரிகாரங்களை செய்து திருமணத்தை நடத்த முயற்சி செய்வது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் அமைதி நிலவும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இடப் பெயர்ச்சி மனதை மகிழ்விக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு திருப்தி. தரும்.சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

பரிகாரம்

சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும். அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யலாம். சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகஙகளின் தாக்கம் குறையும்.

வசீகரமான துலாம் ராசியினரே

துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 8ம்மிடமான ஆயுள், வம்பு வழக்கு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 12ம்மிடமான அயன, சயன மோட்ச ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது உப ஜெய ஸ்தானமாகும். அசுப கிரகங்கள் உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு மிகுதியான நல்ல பலன்கள் நடக்கும். ஆனால் ஆதிபத்திய ரீதியாக நான்கு, ஐந்தாம் அதிபதி ஆறாம் இடத்திற்கு செல்வது சற்று சுமாரான பலன்களையே ஏற்படுத்தி தரக்கூடிய அமைப்பாகும்.

ஆறாமிட சனியின் பொது பலன்கள்

சுய தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். தொழிலை விரிவுபடுத்த தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உபரி பணம் சேமிப்பாக முதலீடாக மாறும் அற்புத காலம். பணப் பரிவர்தனை சுமூகமாக நடைபெறும். பண வரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக் குறைகள் அகலும். எதிர்பாரத தன வரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.

ஆனால் அநாவசிய ஆடம்பர செலவு செய்து விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம். உணவுத் தொழில் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அரசியல்வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.

அரசாங்க ஒப்பந்ததாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தம் வருமானத்திற்கு மீறிய செலவில் சிக்கலை மாட்டி வைக்கும். நீங்கள் செய்யாத தவறுக்கு வீணாக உங்கள் பெயரில் கலங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்தவர் விசயத்தில் நீங்கள் தலையிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். முகத்துக்கு பின்னால் குறை கூறியவர்கள் முகத்திற்கு நேரே பேசுவார்கள். சாட்சி இல்லாமல் தண்டிக்க வழி இல்லாமல் மௌனமாக இருக்க நேரும். எந்த வேலையிலும் மனம் ஒன்றாமல் பற்றற்ற நிலையில் மனம் இருக்கும். சிறிய செயலுக்கு அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும். உழைப்பிற்கான பலன் உங்களை தேடி வருவதில் காலதாமதமாகும். தொழில் நிமித்தமான அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். வெற்றி பெற சிறிது பேராடினாலும் வெற்றி உங்களுக்கே. மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும் மற்றபடி உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு மரியாதை கிடைக்கும். உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். உங்களின் சமுதாய இன வளர்ச்சிக்கு உதவி செய்து உங்களை வெளி உலகத்திற்கு முக்கிய பிரமுகராக அடையாளம் காட்ட முனைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும்.

இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். சில துலாம் ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும். குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் முடிவுக்கு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய , புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்களுக்கு விருது கிடைக்கும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.

மூன்றாம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் வம்பு , வழக்கு ஸ்தானத்திற்கு இருப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுள். ஆயுள் தீர்க்கம். ஒரு சிலருக்கு இனம் புரியாத நோய் , தீர்க்க முடியாத , தீராத நோய் தாக்கம் உருவாகும். எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான காலம். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள் .இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.சனி பகவானின் அருள் இருந்தால் மட்டுமே பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். தசா புத்திகள் சாதகமான அரசியல் வாதிகள் ஜெயிப்பது உறுதி. ஜனன கால ஜாதகத்தில் சனி, ராகு/கேது தசை நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் .இது போன்ற தசை நடப்பவர்கள் வெளிநாட்டிற்கு சென்று கஷ்டப்படும் நிலை ஏற்படும்.

சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை 12ம்மிடமான அயன,சயன, விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளி நாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள்.

இந்த ஆண்டில் துலாம் ராசியினரை சனி பகவான் வெளிநாட்டு காற்றை சுவாசிக்க வைப்பார். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடு இருக்கும் போன சுவடு தெரியாது. தாங்க முடியாத விரயம் மன உளைச்சலை தரும். துலாம் ராசி விவசாயிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இயன்ற வரை பெரிய கடன் வாங்கி விவசாயம் செய்வதை தவிர்க்க வேண்டும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை நேரும். நிம்மதியான தூக்கம் இருக்காது.தசாபுத்தி சாதகமற்ற அரசியல் வாதிகள் களத்தில் இறங்கும் முன்பு சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிரிகளை வெல்ல 6 ம் அதிபதி அல்லது 6ல் நின்ற கிரகம் பலம் பெற வேண்டும் என்பது ஜோதிட விதி என்றாலும் தசாபுத்தி சாதகமாக இல்லாமல் சாதிக்க முடியாது.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை 3ம்மிடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் வாஸ்து குறைபாடு உள்ள வீட்டிற்கும் இடம் பெயர நேரும். உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம் , ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.உங்களின் இளைய உடன் பிறப்புகளால் பொருள் இழப்பு, நட்டம் ஏற்படும்.

ஒரு சிலருக்கு உஷ்ணம் தொடர்பான நோயால் குறுகிய கால பாதிப்பு இருக்கும். உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்ற காலம். இந்த சனிப்பெயர்ச்சியால் கடனும் விரயமும் உங்களுக்கு வரப்போவது உறுதியாகி விட்டது. கடன் வாங்கி சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. தாய், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுதும் துலாம் ராசி குழந்தைகள் மாநில, மாவட்ட , பள்ளி அளவில் முதல் மதிப்பெண் உறுதி.

திருமணம்

திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நேரம். சுப விசேஷங்கள் நடைபெறும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவின் வருகையால் குடும்பம் கலகலப்பாக இருக்கும். பேரன், பேத்தி பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும்.சகோதரர் வகையில் வரவு உண்டு. சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தவறான சிந்தனையில் மனதை அலை பாய விடாமல் இருந்தால் மட்டுமே கவுரவத்தை கட்டிக் காக்க முடியும்.

பரிகாரம்

சிவன் கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிகளை செய்ய வேண்டும். பெளர்ணமி நாட்களில் விரதம் இருந்து கிரிவலம் வர வேண்டும்.

பஞ்சம சனி கம்பீரமான விருச்சிக ராசியினரே

விருச்சிக ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 11ம் மிடமான லாபஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பார் .ஐந்தாம் இடம் என்பது பதவி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானமாகும். உங்களை மனக் குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும்.உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும்.ஞான மார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்த யாத்திரை , கோவில்களுக்கு செல்ல ஆர்வம் ஏற்படும்.

பஞ்சம சனியின் பொதுவான பலன்கள்

சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை வழங்க இருக்கிறார். செல்வாக்கை உயர்த்தி தரும் சனிப் பெயர்ச்சியாக அமையப் போகிறது.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும்.சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.

உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வாலிப வயதில் தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள். இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஓடி வரும் . பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருபணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் . பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் தேடி வரும். இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல் வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்த அரசியல்வாதியாக மாறுவார்கள்.

திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் அன்னியோன்யமும் மிகுதியாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.

சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை 11ம்மிடமான லாபஸ்தானத்திற்கு இருப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு வசந்த காலம். விவசாயம் செழிப்படையும். அரசின் மானியம் உதவிகள் தேடி வரும். இது வரை கட்ட முடியாமல் திணறி வந்த விவசாயக் கடன் தள்ளுபடியாகும். புதிய கால்நடைகள் வாங்குவீர்கள். தொழிலில் வரா கடன் ஏற்பட்டு வராது என்று நினைத்த கடன் தொகை வசூலாகும். உங்களின் மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து எதிர்பாராத தனவரவு, உயில் சொத்து தேடி வரும். புதிய தொழிலில் கிளைகள் உருவாக்க அற்புதமான நேரம். போட்டி, பந்தயங்கள் உங்களுக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தரும். அரசாங்க ஊழியர்கள் சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு 2ம்மிடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தன வரவு மகிழ்வைத் தரும். கடன் இல்லா நிம்மதியான வாழ்விற்கு சனி பகவான் உங்களை அழைத்துச் செல்லும் நல்ல நேரம். அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும். வருமானம் பல மடங்கு பெருகும். தொழில்,வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த தடைகள் விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சனியின் காரகத்துவ தொழில்களான இரும்பு, நிலக்கரி, எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் , நவதானியம் பழைய பொருட்கள் போன்ற தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

புதிதாக சில்லரை வியாபாரம் துவங்குபவர்கள் பெரும் பலன் அடைவார்கள். சில்லரை வியாபாரிகள் பலர் மொத்த விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் , பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள், நீதித்துறையில் பணி புரிபவர்கள், நீதியரசர்கள், சட்ட வல்லுனர்கள், பணம் புரளும் தொழில்களான சீட்டு நடத்துபவர்கள் பெரும் பலன் அடைவார்கள்.உயர்த்த நிலைக்கு உயர்த்தும் சனி பகவான் சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்தால் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்துவார். வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

திருமணத் தடை அகலும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும்.இது வரை வரன் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.காதல் மலரக் கூடிய ஒரு காலம். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரமாகும். சிலர் மதம் மாறி கலப்பு திருமணம் செய்வார்கள். உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். வீட்டுப் பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும்.மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்யும் விதத்தில் வருமானம் கிடைக்கும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்து டன் கலந்து கொள்வதன் மூலம் பல மகிழ்ச்சியான அனுபவங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.பேச்சில் நிதானம், தைரியம் தெம்பு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமம் எடுக்க நேரும் என்றாலும் உங்கள் பேச்சுத் திறமையால் பாதகத்தையும் சாதகமாக மாற்றி விடுவீர்கள் ஒரு சிலருக்கு வலது கண்ணில் சிறு பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கணவரிடம் இருந்து ஆடை, ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பரிகாரம்

குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும். தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News