வழிபாடு

2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

Published On 2026-03-05 12:15 IST   |   Update On 2026-03-05 12:15:00 IST
  • தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

கருணை உள்ளம் கொண்ட தனுசு ராசியினரே

தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ஆறாம் இடமான ருண ரோக , சத்ரு ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ராசியையும் பார்ப்பார்.

உங்களின் ராசி அதிபதி குருவும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு .முன் யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அஷ்டம சனியின் காலத்தில் நடக்கும் கெடுதலில் பாதியை அர்த்தாஷ்டம காலத்தில் கொடுப்பார் என்பதால் அஷ்டம சனி காலத்தில் ஏற்படும் துன்பத்திற்கு இணையான பாதிப்புகள் வரலாம். எனினும் ஜன கால தசா புக்தி சாதகமாக இருந்தால் சொத்து சுகம் போன்ற நல்ல பலன்களை தந்து விடும்.

புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். இந்த வருடம் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். பலவீன மனத்தினர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

தாய் வழி நெருங்கிய உறவினரால் உங்களுக்கு மிகப் பெரிய தொழில் உதவி கிடைக்கும்.வெகு நாளாக தீராத தாய் வழி சொத்து பிரச்சனை சுமூக பேச்சுவார்த்தையில் முடியும். சொத்து சேர்க்கை அதிகமாகும்.சேமிப்பு உயரும் . வங்கிக் கடனுக்கு முயற்சி செய்தால் கடன் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக வாங்கும் கடன் நிம்மதி குறைவை தரும் என்பதால் இயன்றவரை கடன் வாங்குவதை தவிர்க்கவும்.சேமிப்பு முதிர்வு தொகை இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு பணம் கிடைக்கும்.மன சஞ்சலம் மிகும். முறையான திட்டமிடல் மன சஞ்சலத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும்.அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும். தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக மனப்பான்மை மிகுதியாகும். உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. சில குழந்தைகள் மாற்றாந்தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளின் போக்கில் மந்த தன்மை ஏற்படும்.நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பிரயாண அலைச்சல் மிகும். சிலர் நண்பர்கள், உறவினர் களின் விசயத்தில் மாட்டி உங்கள் பெயருக்கு நீங்களே களங்கம் ஏற்படுத்துவீர்கள். யாருக்கும் ஜாமீன், கியாரண்டி போடக் கூடாது.சட்ட சிக்கலில் மாட்ட நேரும். தேவையில்லாத வீண் விவகாரகங்களில் தலையிடுவதும், அடுத்தவர்களுக்கு பரிந்து பேசியும் நீங்களே விரோதத்தை விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் போது அதிக கவனம் தேவை. சனி, செவ்வாய் தசை நடப்பவர்கள் கண்டிப்பாக உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்க கூடாது.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை 6ம்மிடமான ருண , ரோக சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கால், இடுப்பு வலி எலும்பு தொடர்பான பிரச்சனை , நரம்பு மண்டலம் தொடர்பான நோய் வரும் வாய்ப்பு இருக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு மூட்டு கை கால் வலி ஏற்படும்.ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் தக்க மருத்துவரை உடனே அணுக வேண்டும். பணவரவில் மிகப் பெரிய வீழ்ச்சியோ, முன்னேற்றமோ ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆறாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பலர் கடன் கொடுக்க முன்வருவார்கள். குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று செலவை சமாளித்தே மனம் விரக்தி அடையும். சிக்னம், சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற நேரும். . பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா கலை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது.பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகளுடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். நட்பு பாராட்டும் மனம் இல்லாவிட்டாலும் பகையை வளர்க்காமல் இருந்தாலே போதும்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி பகவான் தன்னுடைய 7ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே உங்களுடைய எதிரி என்ற உண்மை புரியும். சுய தொழிலில் பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மிக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.கூப்பிட்ட குரலுக்கு ஒடி வந்த விசுவாசமான வேலையாட்கள் ஒதுங்குவார்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு செல்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகரித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். அரசு, தனியார் ஊழியர்கள் வசதி குறைவான ஊருக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடைபடும்.ஒரு சிலருக்கு அடிப்படை வசதி கூட இல்லாத சிறிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும்.தொழில் , வேலை தொடர்பான மன சஞ்சலம் உங்களை வாட்டும். விவசாயிகள் அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட வேண்டும். விளைச்சல் அதிகம் இல்லாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை உங்களின் ராசிக்கு இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கண்டு பழக்கப்பட்ட உங்களுக்கு எடுத்த செயல்கள் சவ்வாக இழுத்துக் கொண்டே போகும்.குழப்பமான மனநிலை நிலவும். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அசிங்கப் படாமல் பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும்.தீய பழக்கங்களை மனம் நாடும். சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். கடினமாக உழைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். சனியால் பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழிற்சாலைகள், சுய தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் செயலில் மாறுபாடு கண்டு மன வேதனை ஏற்படும். எவ்வளவு செய்தாலும் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவும் என்பதால் முன்பை விட முழு கவனத்துடன் அனைத்து பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு , அரசுஅதிகாரிகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும் . உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.தாயின் உடலில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வரும். ராசியை சனி பார்ப்பது புனர் பூ தோஷமாகும். கழுத்தில் தாலி ஏறும் வரை திருமணத்திற்கு உத்தரவு கிடையாது. பத்திரிக்கை அடித்து மண்டபம் வரை சென்ற பிறகு கூட சில திருமணங்கள் தடைப்பட வாய்ப்புகள் உள்ளது.திருமணம் நிச்சயமானவர்கள் 10வது கிரகமான செல்போனில் பேசி தேவையற்ற விவகாரங்களை வளர்க்க கூடாது. சரணாகதி அடைந்த இறைவழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.

பரிகாரம்

வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடுபடுவீர்கள். சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

தன்னம்பிக்கையான மகர ராசியினரே

மகர ராசியின் அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் பன்னிரெண்டாம் இடமான விரைய ஸ்தானத்தையும் பார்ப்பார். மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானமாகும்.வெற்றி, வீரியம், விஜயம், சகாயம், திட்டமிடுதல் ஆகியவற்றை கூறும் இடத்திற்கு சனி பகவான் செல்லும்போது உங்களுக்கு தொட்டது துலங்கும் பட்டது பூக்கும். விரும்பத் தகுந்த இடப்பெயர்ச்சி நடக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.

சகாய ஸ்தான சனியின் பொது பலன்கள்

பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். இது உங்களுக்கு பொற்காலமாகும்.அழியாத புகழை அடையப் போகிறீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும்.

ஆன்ம பலம் பெருகும். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.மூத்த சகோதர,சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குரு பார்வை சாதகமாக இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன அமைதி குறையும்.முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இருப்பதால் குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். குல தெய்வ , இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை

நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள்.பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு . ஆன்மீக நாட்டம் மிகும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத் தான் செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். சனி பகவான் நியாயவாதி . கொடுத்த பதவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஏழரைச் சனியின் காலத்தில் கற்றுக் கொடுத்து இருப்பார். வெளிநாட்டில், வெளி மாநிலத்திலிருந்து பூர்வீகம் வர முடியாமல் தவித்தவர்கள் பூர்வீகம் வந்து உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். இதுவரை உங்களுக்கு பகல் கனவாக இருந்த நாற்காலி ஆசை நனவாகும். அரசியல் வாதிகள் மீண்டும் களம் இறங்கி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம்.

சனியின் ஏழாம் பார்வை பலன்

சனியின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை தடைபட்ட நீத்தார் வழிபாட்டை செய்து முடிப்பார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். காசி, ராமேஸ்வரம், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பலம் பெறச் செய்வீர்கள். கோவில் திருப்பணிகளை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்தனை, வழிபாடுகள் பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை , பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். பள்ளிக்கு சென்று கற்றதை விட வெளி வட்டாரத்தில் அனுபவத்தில் கற்ற பாடம் உங்களுடன் பயணம் செய்யும். காலம் உங்களுக்கு பல வித அனுபவங்களை பாடமாக நடத்தியுள்ளது. இந்த கால கட்டத்தில் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள். 3,6,11ம் இடங்கள் சனி பகவானுக்கு உகந்த ஸ்தானம் .தைரியத்துடன் வீரத்தைக் கொடுக்கும் ஸ்தானம் .அழியாப் புகழையும் பெருமையையும் கொடுக்கும் ஸ்தானம்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது பணி நிமித்தமாக நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று வருவீர்கள்.ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசா , புத்தி நடந்தால் சுகவீனத்தால் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம். அந்நிய மொழி, பாஷை பேசுபவர்களின் நட்பு கிடைக்கும், அந்நிய மொழி பேசுபவர்களிடையே வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு மத நம்பிக்கை குறையும். சிலர் அதீத மத நம்பிக்கையால் சட்ட சிக்கலை சந்திக்க நேரும்.மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும்.மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும்.

விரயம் கட்டுக்குள் இருக்கும். சுபச் செலவாகவே இருக்கும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும்.இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும் .உங்கள் எண்ணம் போல் வீடு , வாகன யோகம் அமையும்.சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.

ஒருவரின் குலம் கோத்திரம் மரபு ஆகியவற்றை கூறும் ஒன்பதாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு காதல் திருமணம் நடைபெறும். மகர ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். சிலருக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 வது திருமணம், தவறான தரம் குறைந்த நட்பும் ஏற்படும். பெண்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும்.ஆரோக்கியத் தொல்லை குறையும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.

பரிகாரம்

ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் , ஊன முற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தால் நன்மைகள் மிகுதியாகும். மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும் .

உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு

ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனிபகவான் தற்போது கோட்ச்சாரத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.தனது மூன்றாம் பார்வையால் நான்காம் இடமான சுகஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்ப்பார்.ஏழரைச் சனியின் மூன்றாம் இரண்டரை ஆண்டு ஆரம்பம். ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக பிறக்கும்.

பாதச் சனியின் பொதுவான பலன்கள்

ஏழரைச் சனியின் மூன்றாம் சுற்று பகுதி எப்படி நன்மை செய்யும் என்ற சந்தேகம் தோன்றும்.வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள்.பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும். இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள்.வீடு வாகன வசதியை மேம்படுத்த தேவையான கடன் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயர்ந்து சிறப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்கள் ராசியை சனி கடந்த போது ஏற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும்.

உங்களின் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம். வக்கீல்கள், சேல்ஸ்மேன்கள் , இலக்கிய பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவோர் ஆகியோருக்கு பெயர், புகழ் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பீர்கள். மிகக் குறுகிய காலத்தில் உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். மருத்துவ துறையில் உள்ளவர்கள், உணவுத்துறையில் உள்ளவர்கள், இது ஒரு அற்புதமான காலம். ஆடை அணிகலன்கள் விற்பனை செய்பவர், தயாரிப்பாளர்கள், அழகுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம் போன்றவற்றை நடத்துபவர்களுக்கும் வருமானம் குறிப்பிடத் தகுந்தபடி இருக்கும்.

அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் . பலர் சொந்த ஊருக்கு அல்லது சொந்த ஊருக்கு அருகில் பணி மாற்றம் கிடைக்கும். காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு அதிக அளவிளான பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கௌரவமும் தேடி வரும். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். தொழில் தொடர்பான உங்களின் முயற்சிகள் பலிதமாகும். சுய தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பு உருவாகும். தொழில் நிலவி வந்த மந்த நிலை மாறும்.புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.தொழில் ஆரம்பித்து கால் ஊன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணி , சுரங்கத் தொழில், டிராவல் ஏஜென்சி டெக்ஸ்டைல் தொழில் , மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பொன்னான நேரம். இவர்களுக்கு அரசின் சலுகைகள் , மானியங்கள் எளிதில் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். உங்களுக்கு தெரிந்த நன்கு பரிட்சயமான தொழிலே சிறக்கும். அனைத்து துறையை சாரந்தவர்களுக்கும் லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.நீர்வளம் பெருகும். விவசாயம் செழிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் உண்டு. செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை நான்காம் இடமான சுகஸ்தானத்தில் பதிகிறது. வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். சுமாரான வீட்டில் இருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்வார்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். அண்ணன், தம்பிகளிடம் யார் அம்மாவை பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு மிகும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நாட்டம் குறைந்து டிவி, சினிமா, மொபைல் போன், விளையாட்டு என எண்ண அலைகள் சிதறும். சிறு சோம்பேறித் தனம் ஏற்படும். நல்ல மதிப்பெண் பெற சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில குழந்தைகள் பள்ளியை மாற்ற நேரும்.சிறு உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் சாதனை படைக்க ஏற்ற காலம்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிகிறது. வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் உங்களின் வாய் வார்த்தையால் தேவையில்லாத வம்பு வழக்கை ஏற்படுத்துவார் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. யாரையும் கடுமையாக பேசக்கூடாது. தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக ஒற்றுமை குறைவு ஏற்பட்டு கோர்ட் படி ஏற நேரும்.

எப்பொழுதோ எற்பட்ட செக் தொடர்பான கேஸ் உங்களை படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும். கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்க நேரும்.அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வருமானம் மகிழ்ச்சியை தரும் விதமாக இருக்கும். தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை 11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு இருப்பதால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மிகும். தீவிர சிந்தனைகள் இருக்கும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். தீடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி , உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தேங்கி கிடந்த பழைய பணிகள் மளமளவென முடியும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கௌரவமும் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு இது சாதகமான காலம். குழந்தைகளால் மன மகிழும் சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான எதிர்காலம். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள் தடைபட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

திருமணம்

ஜென்ம சனியின் காலத்தில் தடைபட்ட திருமணம் தற்போது உங்களுக்கு வசப்படும்.சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.மனதில் எதிர்பார்த்தபடியே நல்ல வரன் வந்து சேரும்.இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

பெண்கள்

அதிக நன்மைகள் நடக்கும்.புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கெளரவம் உயரும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம்.மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து பணம் வரும்.

பரிகாரம்

கோவில் குளம், கிணறு, நீர் நிலைகளை சுத்தம் செய்யும் பணி செய்ய வேண்டும். துப்புரவு தொழிலாளிகளுக்கு உணவு ஆடை தானம் செய்யலாம்.

குரு கடாட்சம் பெற்ற மீன ராசியினரே

மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசியில் நின்று ஜென்ம சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 10மிடமான தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பார். ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க சுப, அசுப நிகழ்வுகளின் பெரும் பகுதியை ஏழரை சனி, அஷ்டமச் சனி காலங்களிலேயே அனுபவிக்கிறார்கள்.

சனி பகவான் ராசியைக் கடக்கும் போது எந்த ராசியாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதல் சுற்றாக இருந்தால் சிறிய பாதிப்பு ஏற்படும். இரண்டாம் சுற்றாக இருந்தால் வாழ்வில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளும் நடைபெறும். மூன்றாவது சுற்றாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடுமிகும்.

ஜென்ம சனியின் பொதுவான பலன்கள்

உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஒடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனத் தடுமாற்றம் ஏற்படும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். ஜென்மச் சனியன் காலத்தில் பண மோசடி மிகுதியாக இருக்கும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.

நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும். ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது.

வேலைப் பளு அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். மூன்றாம் சுற்று ஏழரை சனி நடப்பவர்கள் பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரியலாம். அல்லது சற்று அலைச்சல் மிகுந்த பணியாக இருக்கும். சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும். வெளிநாட்டு படிப்பு அல்லது வேலைக்கு வாய்ப்பு கிட்டும். அரசு வகை ஆதாயம் உண்டு. தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்ல வராகவும் மனதிற்குள் வஞ்சமும் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.

ஒருவர் புகழப்படுவதும் தாழ்த்தப்படுவதும் ஏழரைச் சனியின் காலத்தில் தான். ஜனன கால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9ம் அதிபதியின் தசை நடந்து கொண்டு இருந்தால் புகழ் கொடி கட்டி பறக்கும். சினிமா கலைஞர்களுக்கு பல மொழிப் படங்களில் வாய்ப்புகள் தேடிவரும். கடல் கடந்து சென்று கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிட்டும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தை பார்க்கிறார். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும். உங்கள் முன்னோர்களில் பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம் .இதிலிருந்து தப்பிக்க முறையான உடற்பயிற்சி அவசியம். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய வியாதி தாக்கும். அதுமட்டுமல்லாமல் சரியான மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நலம். வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல் , காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும்.

ஜென்மத்தில் சனி பகவான் என்பதால் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவ தோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமூதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி தனது 7ம் பார்வை ராசிக்கு 7ம் மிடமான களத்திர ஸ்தானத்தை பார்க்கிறார். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் நட்பு ரீதியான பழக்கம் பல குடும்பத்தில் தம்பதிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும். வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த பல தவறான தொடர்புகள் அரங்கேறும். பல குடும்பங்களில் ஆண்களும், பெண்களும் சந்தேகப்பட்டு நண்பர்களை காதலர்களாக மாற்றி விடுகிறார்கள். தம்பதிகள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு விட்டு கொடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாகும்.

சமுதாய அங்கீகாரத்தை கூறும் ஏழாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனினும் சிலருக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

சனியின் 10ம் பார்வை பலன்

சனி பகவான் தனது 10ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகம் தொழில் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.

விவசாயிகள் தவறான ஆலோசனையில் மதி இழந்து பழக்கம் இல்லாத பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது. கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள்.

திருமணம்

ஜனன கால ஜாதக ரீதியான பல்வேறு தோஷங் களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் ஏழரை சனியின் காலத்தில் முயற்ச்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறிய வர்களுக்கும் ஏழரை சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும்.

பெண்கள்

பெண்களுக்கு சுமாரான காலம். சோம்பல் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வமின்மை அதிகரிக்கும். சிறிய விஷயங்களை பொருட் படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தாய் வழி குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள்.பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். இனம் புரியாத வெறுமையும் தூக்கமின்மையும் ஏற்படலாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச்சனி சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

பரிகாரம்

தினமும் திருக்கோளறு பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். அரசு மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News