null
2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
- ஆடம்பரமான ரிஷப ராசியினரே தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார்.
- கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
மேன்மைமிகு மேஷ ராசியினரே
தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு 12ம் மிடமான மீன ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்ப்பார்.
ஏழரை சனியின் ஆரம்பம். தற்போது மீனம் ராசியில் பயணிக்கும் சனி பகவான் மீனம் மேஷம் ரிஷப ராசியை கடக்கும் வரை உங்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஏற்படும். பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, மிகுந்த வைத்திய செலவு படிப்பில் ஆர்வமின்மை இருக்கும். மத்திம வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் வீடு வாகன யோகம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். வயோதிகராக இருந்தால் தோற்றப் பொலிவு குறைந்து உடல் பலவீனம் , கை, கால் வலி இருக்கும். சோர்வும், தளர்ச்சியும் மிகுதியாக இருக்கும். தற்போது 3வது சுற்று ஏழரை சனியின் பிடியில் இருக்கும் வயோதிகர்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் மனதை பலவீனப்படுத்தும். எனினும் ஆயுள் சிறப்பாக இருக்கும் என்பதால் எந்த பயமும் வேண்டாம்.
விரயச் சனியின் பொதுவான பலன்கள்
மேஷ ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி பகவான் பனிரெண்டாமிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 12-ம் இடம் என்பது விரயம், பிரிவினை, அயன சயனம், முதலீடு செய்தல் கால்கள் போன்ற காரகத் துவங்களை குறிக்கும். பலருக்கு முதலீடே காணாமல் போய்விடும். அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு , புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். இந்த சனிப்பெயர்ச்சியில் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும். வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம்.
நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரயத்தை சுபமாக மாற்ற ஒருவரின் அவசிய தேவையான வீடு, வாகன யோகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீட்டிற்கு பராமரிப்பு வேலை செய்து புதிதாக மாற்றலாம். சற்று வசதி அதிகமாக இருப்பவர்கள் குடியிருப்பு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம். இரண்டு சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். சிலர் பிழைப்பிற்காக வெளியூர் , வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும். சிலர் துக்கம் தாளாமல் மன நிம்மதி தரும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சென்று முக்திக்கு முயல்வார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
அதற்கான வைத்திய செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும். மேலும் ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார். ஆக மொத்தத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் குடும்பம், வாழ்க்கை தத்துவம், பாவம், புண்ணியம் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உணர வைப்பார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம்படும். அரசியலை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மிகும். கலைத் துறையினர் சக நடிகர் நடிகைகளிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். அதிக தொகை சம்பளம் கேட்டு வாய்ப்யை இழக்க நேரும். தயாரிப்பாளர்கள் அதிக முதலீடுகள் செய்து படம் எடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
மூன்றாம் பார்வை பலன்கள்
சனி பகவான் தனது 3ம் பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை என்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பேச்சை குறைக்க வேண்டும். வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். முன் யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . ஆரம்ப கல்வியில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க அதிக நன்கொடை கொடுக்க நேரும்.
ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுக்கும். வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய நேரலாம். பள்ளி, மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் படிக்கும் வேலை மட்டும் பார்த்தால் எதிர்காலம் சிறக்கும். சிலர் ஹாஸ்டலில் தங்கி படிக்க நேரும். பச்சிளம் குழந்தைகளுக்கு பேச்சுவர கால தாமதமாகும். எனவே வைத்திய செலவு செய்து மனவருத்தம் அடைய வேண்டாம். இதுவரை குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிய மேஷ ராசி தம்பதிகளுக்கு குலம் தழைக்க வாரிசு கிடைக்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். மேடை பேச்சாளர்கள் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும்.
ஏழாம் பார்வை பலன்கள்
சனியின் 7ம் பார்வை ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிவதால் சிலருக்கு சுகர், பிபி போன்ற நீண்ட நாள் மருத்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும். ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க நேரும். அல்லது தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏழரை சனியின் காலம் என்பதால் மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி வீண் ஆபத்தை அதிகரிக்காமல் உண்மையான தேவைக்கு அரசு வங்கிகளின் உதவியை நாட வேண்டும். கடன் வாங்கும் முன் பத்திரத்தில் கையெழுத்திடும் முன் பல முறை வாசித்து,யோசித்து கையெழுத்து போடவும். பண ஏமாற்றம், இழப்பு ஏற்படும் காலம் என்பதால் சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போன்றவற்றில் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களின் உண்மையான நண்பன் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார்? என இனம் காணமுடியும். உற்றார் உறவினர்களிடம் பகைமையை வளர்க்காமல் அனுசரித்து செல்வதால் பிற்காலத்தில் பெரிய பாதிப்புகள் வராது.
பத்தாம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் விதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. முன்னோர்கள் கடைப்பிடித்த கொள்கையில் மாறுபட்ட கருத்துகள் உண்டாகும். தந்தை வழி முன்னோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும்.கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ஆராய்ச்சி உயர் கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரலாம். சிலருக்கு வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு மனோதத்துவ நிபுணரை சந்திக்க நேரும்.பித்தம், வாதம், கபம் தொடர்பான நோய்கள் ஏற்படும். நோயின் தன்மை புரியாமல் பல மருத்துவர்களை சந்திக்க நேரும்.
திருமணம்
ஒரு ஜாதகத்தில் எவ்வளவு விதமான தோஷங்கள் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் அந்த பாதிப்புகள் செயலற்று போகும். தற்போது உங்களுக்கு ஏழரை சனி நடப்பதால் திருமணத் தடை அகன்று திருமணத்திற்கான முயற்சி பலிதமாகும். பலருக்கு காதல் திருமணம் நடக்கும். காதல் திருமணம் செய்தோர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரும். மறுமணம் கைகூடும்.
பெண்கள்
எந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற நிதானம் இல்லாமல் மன குழப்பம் வரும். பெண்களுக்கு கால்வலி, வயிறு உபாதை மற்றம் முதுகு வலியால் அவஸ்தை ஏற்படும். ஒரு சிலர் பணத்தேவையை சமாளிக்க முடியாமல் அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு முடியாமல் குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக பெருக்கி தரும் பணமோசடி நபர்களிடம் பணத்தை இழக்கலாம். மிகச் சுருக்கமாக பண இழப்பு, ஏமாற்றம் எந்த வழியில் வேண்டுமா னாலும் வரலாம். முறையான திட்டமிடுதலும் , நேர்மையும், இறைநம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும். சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகச் சிறந்தது.
ஆடம்பரமான ரிஷப ராசியினரே
தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார். 7ம் பார்வையால் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 8ம் மிடமான ஆயுள் வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வை இடுவார்.
ரிஷப ராசிக்கு பாக்கியாதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்கு மேன்மையான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய காலம் கோட்ச்சாரத்தில் 3,6,11ம் இடத்தில் வருட கிரகங்கள் சஞ்சரிக்கும் காலமாகும். இப்பொழுது அந்த பொற்காலம் உங்களுக்கு ஆரம்பமாகி விட்டது. மகாலஷ்மி தாயார் உங்களுக்கு வேண்டிய வரத்தை அருள உள்ளார். எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாகும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்து கொள்ளலாம்.
லாபச் சனியின் பொதுவான பலன்கள்
பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறு வீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இந்தக் கோட்ச்சார நிலவரம் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பாகும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் கூடும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சனை ஓரளவு குறையும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலருக்கு தாத்தா மூத்த சகோதர,சகோதரி மூலம் நிதி உதவி கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. எதிர்கால தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். மந்திரி பதவியை எதிர்பார்த்தவர்களுக்கு சட்டசபை பாராளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். ஆனந்தமான நேரமாகும். வெளி உலகத்திற்கும் , கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும். கட்சியின் உயர் பதவிக்கு தகுந்த நபர் நீங்கள் தான் என அறிந்து முக்கிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மேலிடத்தின் ஆதரவால் பொதுக் கூட்டம், மாநாடு நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவீர்கள். இந்த 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க முனைப்பாக செயல்படுவீர்கள். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சொந்த தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். பல ரிஷப ராசியினர் புதியதாக தொழில் துவங்குவார்கள். புதிய தொழில், தொழில் கிளைகள், தொழில் விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை தேடி வரும். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் , ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள்.
சுயதொழில் செய்பவர்களுக்கு இது மிகப் பொன்னான காலம். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கிய குறைவு உங்களை கவலையில் ஆழ்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.
மூன்றாம் பார்வை பலன்கள்
லாபஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஞாபக மறதி இருக்கும். அதனால் வேலையில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனை ஏற்படும். வெளிநாட்டு வணிக, வேலை வாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதர வழியில் பொருள் உதவி வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். அதிக பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள். ஜனன கால ஜாதகத்தில் சுப யோக தசை நடப்பவர்களுக்கு கெளரவ பதவிகள் தேடி வரும்.
குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். விமானம் மூலம் ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். ஆன்மீக வாதிகள், குருமார்கள், துறவிகள் இவர்களின் ஆசி கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும். வாகனங்கள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நல்ல வேலை கிடைக்கப் பெறுவர். இரும்பு, எண்ணெய், விவசாயம். தொழில்கள் ஏற்றம் பெறும். தோல் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் பெறுவார்கள்.
ஏழாம் பார்வை பலன்கள்
சனியின் 7ம் பார்வை ராசிக்கு 5ம் மிடத்தில் பதிகிறது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம், அதிர்ஷ்டம் பற்றி கூறுமிடமாகும். பணம் எந்த வழியில் வருகிறது என்று இனம் காணமுடியாத வகையில் வந்து சேரும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். பங்குச் சந்தை ஆதாயம் பல மடங்கு கூடும். கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவர்கள். உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைக்கும்.
கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வெளி நாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும். சாதகமற்ற தசாபுத்தி உள்ள சில குழந்தைகளின் நடவடிக்கைகள் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருக்கும். குழந்தைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்து அதற்காக பிறகு கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முன்னேற்றத்திற்கு அதிக செலவு செய்யும் நிலை உருவாகும். சிலருக்கு தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.
பத்தாம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு கிடைக்கும். லாட்ரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் தேடி வரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும் . வேலைப் பளு குறையும். குறைந்த வேலை நிறைந்த ஊதியம் என உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும்.மேலும் சுகர் , பிபி, நீண்ட நாள், வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், மூட்டு வழி, மூட்டு தேய்மானம் , மூட்டு அறுவை சிகிச்சை, உடல் வலி, கை கால் வலி, உடல் அசதி உருவாகும். ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்ற தசை நடந்தால் சட்ட விரோத செயல்களால் சிறை தண்டனை அனுபவிக்க நேரும். ஆயுள் தீர்க்கம். விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும் போது தாராளமாக செலவு செய்யாமல் சேமித்து வைக்க வேண்டும்.
திருமணம்
திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். இதுவரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்து அவர்களுக்கு மறுவிவாகம் நல்லவிதமாக நடக்கும்.
பெண்கள்
பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி. பயணங்கள் மிகுதியாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.
பரிகாரம்
முன்னோர்கள் வழிபாடு தடை தாமதத்தை நீக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லருளை பெற்று தரும்.
அன்பான மிதுன ராசியினரே
வருட கிரகங்களில் மிக முக்கிய கிரகமான சனிபகவான் தற்போது கோட்ச்சாரத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.
மிதுன ராசிக்கு அஷ்டமாதி பதி மற்றும் பாக்கியாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில நல்ல பலன்களை ஏற்படுத்தி தந்துவிடும்.பொதுவாக குரு வீட்டில் சனியோ சனி வீட்டில் குருவே இருப்பது சிறப்பான அம்சமாகும். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் உங்கள் வயதிற்கும், தகுதிக்கும் திறமைக்கும், பூர்வ புண்ணிய பலத்திற்கும் ஏற்ப பலன் பெறும் காலம் வந்து விட்டது.
தொழில் ஸ்தான சனியின் பொதுவான பலன்கள்
9ம்மிடத்தில் சனி பகவான் நின்ற போது ஆரம்பித்த தொழில் பெரும் விருட்சமாகி கனி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தொழிலை இழுத்து முடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் வாழ்வில் செட்டிலாகி விடும் நேரமாகும். ஒரு மனிதனை சமூதாயத்தில் தலை சிறந்த மனிதனாக உயர்த்திக் காட்டுவது தொழில் தான். தொழில் சிறப்பாக இருந்தால் எல்லாம் தேடி வரும். தொழிலில் பெரிய சாதனையை பெற்றுத் தரும் வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும் . வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்கள் தேவைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். இதுவரை முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. புதிய சொத்துக்கள் வாங்கும் முன்பு முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள்.
சொத்துகளின் மதிப்பு உயரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இதுவரை நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.
திடீர் பதவி, புகழ், கெளரவம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசியலில் கருத்து ஒற்றுமை ஏற்படும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவமும், பதவியும் கொடுக்கும். புனித நீராடல், புனித ஸ்தல யாத்திரை சென்று வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்தணர்கள், சிவனடியார்களுக்கு தான, தர்மங்கள் கொடுத்து ஆனந்தம் அடைவீர்கள் சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.
முன்றாம் பார்வை பலன்கள்
சனி பகவானின் 3ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய அயன, சயன ஸ்தானத்தில் பதிகிறது. செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது எப்படி என்பதை சனி பகவான் புரிய வைப்பார். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். வெளிநாட்டு குடியுரிமையில் நிலவிய சட்ட சிக்கல்கள் சீராகும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. வரவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை.
முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும். ஊருக்கு தெரியாமல் இருந்த உங்களின் உல்லாச வாழ்க்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தும். உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பிக்கையானவர்களே முதுகில் குத்த நேரம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
உறவினர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
ஏழாம் பார்வை பலன்கள்
தொழில் ஸ்தான சனியின் 4ம் பார்வை சுக ஸ்தானத்திற்கு இருப்பதால் தொழில் நிமித்தமான பயணம், அலைச்சல் மிகுதியாகும். தடைபட்ட வீடு, வாகனம் யோகம் தற்போது கிடைக்கப்பெறும். பல வங்கி ஏறியும் வீடு கட்ட கடனுதவி கிடைக்காததால் வீடு கட்டும் முயற்சியை ஒத்தி வைத்த உங்களுக்கு வீட்டு கடன் இப்பொழுது வீட்டுக் கதவை தட்டும். வீட்டுக் கடன் கிடைத்து வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி நடந்து கொண்டு இருந்தால் உங்களின் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும்.
சனியின் பார்வை 4ம்மிடத்தில் இருப்பதால் பழைய வீட்டை வாங்கினால் பொருள் விரையம் குறையும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு சற்று விலை உயர்ந்த புதிய வண்டி வாங்கும் வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய் வழி நெருங்கிய உறவினர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.
பத்தாம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. சனி தான் பார்த்த வீட்டின் வேலையை தாமதப்படுத்தி தான் நடத்துவார் என்பதால் வரன் சார்ந்த மனக்குழப்பம் இருக்கும்.கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறு பாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் டையே முறையான ஒப்பந்தம் இட்டு தொழில் நடத்த வேண்டும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அரசியலில், மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். சேவை மனப்பான்மையுடன் இருந்தால் தேர்தல் வெற்றி உங்களுக்கே. சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக நல்ல பெயரை பெற்றுத் தரும். மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தொழிலுக்கு தேவையான இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம். குலதெய்வ அருள் கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும். வீடு அல்லது தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட்டால் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.
திருமணம்
7ம் இடத்திற்கு சனி பார்வையால் தடைபட்ட காதல் திருமண முயற்சிகள் கைகூடும். பலர் காதல் வயப்படுவார்கள். சிலர் மதம் மாறிய அல்லது குலம் மாறிய திருமணம் செய்வார்கள். மூத்த சகோதர, சகோதரிகளுக்கு திருமணமாகமல் லயன் கிளியர் ஆகாமல் இருநத இளவட்டங்களுக்கு ரூட் கிளியர் ஆகிவிடும். மண முறிவு ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். சிலருக்கு வரன் பற்றிய முடிவு எடுக்க முடியாமல் மன குழப்பம் இருக்கும்.
பெண்கள்
நாட்டின் கண்களான மிதுன ராசி பெண்களுக்கு வாழ்க்கை தரம் உயரும். புதிய தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். இதுவரை யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். தாய்வழிச் சொத்தில் முழுமையான பங்குகள் கிடைக்கும். புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
வீடு, மனை, வாகனம், திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு கூடும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.வாழ்க்கை துணையின் அன்பு அதிகரிக்கும்.அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு நல்ல பலன் தரும். வசதி இருப்பவர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம்.
அன்பான கடக ராசியினரே
கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 6ம் மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிக்கும் சனி பகவான் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். சனி பகவான் மூலம் வாழ்க்கை தத்துவத்தை படிக்கப் போகிறீர்கள்.
பாக்கிய சனியின் பொதுவான பலன்கள்
கடக ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் சனி பகவான் தர்ம வழியில் நடத்தி செல்ல இருக்கிறார். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை இந்த சனிப்பெயர்ச்சி தரும். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குடும்ப சூழ்நிலை காரணமாக பொருத்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் ,படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். நல்ல வேலை கிடைக்காமல் மனம் நொந்து போன இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
9ம் இடச் சனி என்பதால் தொழில்/ வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்களுடன் , உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பம். டிரேடிங் துறையில் குறிப்பாக ஜவுளி அழகு ஆடம்பர பொருள், விற்பனையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள்.புதிய வண்டியில் கெத்தாக ஊர் சுற்றி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். வசதி குறைவான வாடகை வீட்டில் அடைபட்டு இருந்தவர்கள் லீசுக்கு நல்ல வசதியான வீட்டிற்கு செல்வீர்கள்.உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள். புதுப் பணத்தை பார்ப்பதால் சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி பலிக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள்.அரசியல் நாட்டம் மிகும். அரசியல் கட்சிகள், சங்கங்கள் இயக்கங்களில் முன்னிலை உறுப்பினராகுவீர்கள். இதுவரை உங்களை உதாசினம் செய்தவர்கள் உங்களின் தயவு தேடி வருவார்கள்.
தாய், தந்தையின் ஆரோக்கியம் சிறப்படையும். பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தை விட்டு நகரும் முன்பு புத்திர பாக்கியத்தை தந்து விட்டு தான் செல்வார். சனிபகவான் சாதகமான நிலையில் இருந்தாலும் ராகு கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக இருப்பதால் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும்.சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும்.ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது சிறப்பான பலனை ஏற்படுத்தித் தரும்.
சனியின் மூன்றாம் பார்வை பலன்கள்
9ம் இடத்தில் அமரும் சனி பகவான் தனது 3 ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது.பணம் என்றால் ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சங்கள் / கோடிகள். வாழ்நாளில் இதுவரை பார்க்காத பெரும் பணம். நடப்பதெல்லாம் கனவா? நனவா என்று உங்களை கிள்ளிப் பார்க்க வேண்டும். கோடீஸ்வர யோகம் கடக ராசிக்கு வந்து விட்டது. ஒரு காலகட்டம் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வெகு விரைவில் பொற்காலத்தை தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள். உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உங்களுக்கு உதவுவார். இதுவரை இருந்த வந்த சகோதர சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். சர்க்கரை நோயாளிகள் கால் பாதம் , விரல்களை முறையாக பராமரிக்க வேண்டும். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் .
சனியின் ஏழாம் பார்வை பலன்கள்
பாக்கிய சனியின் ஏழாம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானமான 3ம்மிடத்திற்கு இருக்கிறது. இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.இது நாள் வரை தடை தாமதமான உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் . ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.சில நேரங்களில் முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளில் இருந்து மாறுபட்டு செயல்பட நேரும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுங்கள்.அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும்.உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய இரக்க சுபாவம் அதிகரிக்கும்.விவசாயிகள் நீண்ட காலமாக செலுத்தாக கடன் பாக்கிகளை அரசு தள்ளுபடி செய்யும். பலர் எந்த கஷ்டம் வந்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
சனியின் பத்தாம் பார்வை பலன்
சனியின் 10ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. இது நாள் வரை நோயிற்கான காரணம் மற்றும் நோயின் தன்மை தெரியாமல் செய்த வைத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நோய்க்கான காரணம் கண்டறிந்து சிகிச்சையால் பலன் கிடைக்கும்.வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்தமாக கோவில் கட்ட விருப்பம் உள்ளவர்கள், சுய ஜாதக வலிமையை சரி பார்த்து சொந்த கோவில் கட்ட உகுந்த காலம். ஏற்கனவே கோவில் வைத்து இருப்பவர்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய மூலவரின் சக்தி கூடும்.
திருமணம்: சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திருமண வாய்ப்புகள் தேடி வரும். கோச்சாரத்தில் 2026 ஆம் ஆண்டு வரை இரண்டாம் இடத்தில் கேதுவும் எட்டாமிடத்தில் ராகுவும் சஞ்சரிப்பார்கள். 2027ல் ராசியில் கேதுவும் ஏழாம் இடத்திற்கு ராகுவும் செல்வார்கள். சிலருக்கு தவறான காதல் கலப்பு திருமணங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வரன் பற்றி நன்றாக விசாரித்த பிறகு திருமணத்திற்கு முயற்சிக்க வேண்டும். மிக முக்கியமாக சுய ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம் உள்ளவர்கள் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு திருமணம் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பெண்கள்
கடக ராசிப் பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும். மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர் பிரச்சனைகள் சீராகும்.அசையாச் சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் இரட்டியாகும்.சகோதர சகோதரிகளிடம் நட்பும், நல்லுறவும் எற்படும். சகோதர வர்கத்துடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யும் எண்ணம் எற்படும். பெண்கள் குழுவாக சேர்ந்து அழகு, ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து லாபம் பெறலாம்.புத்தாடை தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும்.
பரிகாரம்
காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. அதுவும் இராகு காலத்தின் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். செவ்வாய் கிழமைகளில் முருகன் வழிபாடு செய்வது நலம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406