கிரிக்கெட்

அடுத்த சச்சின்- கங்குலி இவங்கதான்: இந்திய இளம் வீரர்களை பாராட்டிய சேவாக்

Published On 2024-02-06 14:45 GMT   |   Update On 2024-02-06 14:45 GMT
  • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
  • இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். 

இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

என்று சேவாக் கூறினார்.

Tags:    

Similar News