கிரிக்கெட் (Cricket)

நல்ல மனம் உன்போல் கிடையாது..! பாண்டியாவிற்கு ஆதரவு தெரிவித்த கோலி- வைரலாகும் வீடியோ

Published On 2024-04-12 07:11 GMT   |   Update On 2024-04-12 07:11 GMT
  • ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.
  • தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 196 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலியின் செயல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

அந்த நிலையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி உடனே ரசிகர்களை நோக்கி அவரும் இந்திய வீரர் தான் என்னும் வகையில் சைகை காட்டி இப்படி செய்யாதீர்கள் என கூறினார். மேலும் அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் எனவும் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

விராட் கோலி, எதிரணி வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர். அவரை சீண்ட எதிரணி வீரர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால் அவரை சீண்டினால் பேட்டால் தான் பதிலடி கொடுப்பார். அது நிறைய முறை நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்க்கு எதிராக நிறைய முறை கோலி வம்பிழுத்துள்ளார். ஆனால் ஸ்மித் பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் விளையாடாமல் இருந்தார். ஒரு வருடம் கழித்து வந்து விளையாடினார். அப்போது இந்தியாவுடனான போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை கலாய்த்து கோஷங்களை எழுப்பினர். உடனே பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி அப்படி செய்யாதீர்கள் எனவும் அவருக்கு ஆதரவு கொடுங்கள் எனவும் சைகை மூலம் காட்டினார்.

இதேபோல ஐபிஎல் தொடரின் போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மோதலில் ஈடுப்பட்டனர். அதன் பிறகு ரசிகர்கள் நவீன் உல் ஹக்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அப்போது ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். உடனே விராட் கோலி அவரை கிண்டல் செய்யாதீர்கள் என கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத நவீன் உல் ஹக், கோலியிடம் வந்து கட்டியணைந்து சமரசம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News