சின்னசாமி மைதானம் இல்லை: RCB அணியின் ஹோம் மைதானம் இதுதான்- வெளியான தகவல்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியாகினர்.
- இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
பெங்களூர்:
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.