null
ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன்
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி.
- இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி. இவர் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். இவர் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். மெக் லானிங்கின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அலிசா ஹீலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளார். தனது போட்டித்தன்மை சற்று குறைந்துவிட்டதாக உணர்வதாலும், இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
35 வயதாகும் அலிசா மார்ச் 6 முதல் 9 வரை பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும்.
தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில், 7,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் 275 விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்களை செய்துள்ளார். மேலும், 8 உலகக் கோப்பை பட்டங்களை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் ஒருவர். இவர் 2022 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 170 ரன்கள் குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.