கிரிக்கெட்

வதந்தி கிளப்புபவர்களுக்கு வேறு வேலை இல்லையா?: ஆவேசம் அடைந்த ஸ்ரீகாந்த்

Published On 2024-03-15 14:47 GMT   |   Update On 2024-03-15 14:49 GMT
  • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
  • இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

புதுடெல்லி:

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது.

இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது எனவும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்கு பாதிப்பை கொடுக்கும் என ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

விராட் கோலி இல்லாமல் டி20 உலக கோப்பை அசாத்தியமற்றது. அவர்தான் நம்மை 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் அவர்தான். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன?

இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்கவேண்டும். எந்த உலக கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100 சதவீதம் கண்டிப்பாக அவர் தேவை. 2011-ல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News