கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கான்வே இரட்டை சதம்- 575 ரன்கள் குவித்து நியூசிலாந்து டிக்ளேர்

Published On 2025-12-19 10:34 IST   |   Update On 2025-12-19 10:34:00 IST
  • நியூசிலாந்து வீரர் கான்வே 227 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
  • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மவுண்ட் மாங்கானு:

நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்து இருந்தது.

தொடக்க வீரர்களான கேப்டன் டாம் லாதம், கான்வே சதம் அடித்தனர். லாதம் 137 ரன் எடுத்தார். கான்வே 178 ரன்னிலும், ஜேக்கப் டபி 9 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கான்வே மிகவும் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். அவர் 316 பந்துகளில் 28 பவுண்டரியுடன் 200 ரன்னை எடுத்தார்.

34 வயதான கான்வேக்கு இது 2-வது இரட்டை சதமாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டை சதம் அடித்து இருந்தார். கான்வே 227 ரன்னில் ஆட்டம் இழந்தார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

5-வது வீரராக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார். டேரில் 11, டாம் ப்ளண்டெல் 4, பிலிப்ஸ் 29, ஜகரி ஃபௌல்க்ஸ் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து நியூசிலாந்து 575 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ரச்சின் 72 ரன்னிலும் அஜாஸ் படேல் 30 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News