கிரிக்கெட் (Cricket)

இறுதிப் போட்டியில் மோத இந்த 2 அணிகளுக்கு தான் வாய்ப்பு- மெக்ராத் கணிப்பு

Published On 2026-03-03 14:29 IST   |   Update On 2026-03-03 14:29:00 IST
  • இந்திய அணியில் மிகப் பெரிய பலமாக பும்ரா இருக்கிறார்.
  • பும்ரா முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.

சென்னை:

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், எம்.ஆர்.எப். பேஸ் அறக்கட்டளை தலைவருமான மெக்ராத் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியம் இல்லை. ஆஸ்திரேலிய அணியை பற்றி நான் கவலைப்படுகிறேன்.

சூப்பர் 8 சுற்றுக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். அது முடியாமல் போனது. ஜிம்பாப்வேயிடம் தோற்றது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வேதனை அளித்திருக்கும். அந்த அணி முன்னேற்றம் காண்பது அவசியமாகும்.

தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்காவே முன்னிலையில் இருக்கிறது. புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். நியூசிலாந்து சிறப்பான போட்டியை தரக்கூடிய அணி தான். ஆனால் தென் ஆப்பிரிக்காவை எதிர் கொள்ளும்போது அந்த அணி திணறுகிறது.

இங்கிலாந்தை அரை இறுதியில் எதிர்கொள்ளும் இந்தியா அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும். தொடக்கத்தில் திணறிய இங்கிலாந்து அணி பின்னர் திறமையாக ஆடி வருகிறது. அந்த அணி ஒரு ஆபத்தானது. அதே நேரத்தில் போட்டி தினத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடக்கூடியது.

இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்க அணி மோத வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இதில் தென்ஆப்பிரிக்க அணியே சிறந்தது. அந்த அணி சமீப காலமாக 20 ஓவர் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்திய அணியில் மிகப் பெரிய பலமாக பும்ரா இருக்கிறார். அவர் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். தற்போது அர்ஷ்தீப் சிங்கும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார்.

இவ்வாறு மெக்ராத் கூறி உள்ளார்.

Tags:    

Similar News