கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி: அரியானாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜார்க்கண்ட்

Published On 2025-12-18 18:28 IST   |   Update On 2025-12-18 18:28:00 IST
  • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது.
  • அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது. இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் அரியானா அணி களமிறங்கவுள்ளது.

Tags:    

Similar News