கிரிக்கெட் (Cricket)

4வது டி20 போட்டி ரத்து: டிக்கெட் பணத்தை திரும்ப வழங்குகிறது உ.பி. கிரிக்கெட் சங்கம்

Published On 2025-12-19 05:10 IST   |   Update On 2025-12-19 05:10:00 IST
  • நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
  • லக்னோவில் நடக்க இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனியால் கைவிடப்பட்டது.

லக்னோ:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நடைபெற இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வுசெய்த பிறகே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைவிட்டனர். 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா என ஆய்வு செய்தனர்.

ஆனால் கடும் பனி நிலவியதால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பிசிசிஐ மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

போட்டி நடக்காததால் டிக்கெட்டுக்கு உரிய பணத்தை திரும்ப வழங்குவது இந்திய கிரிக்கெட் வாரியமா அல்லது உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் டிக்கெட்டுக்கு உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமே முழு பொறுப்பு என கிரிக்கெட் வாரியம் கூறியது.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்ற ரசிகர்களுக்கு அதற்குரிய பணம் அதே வழியில் திரும்ப வழங்கப்படும். அது தொடர்பான விவரங்கள் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு அவர்களது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் பிரேம் மனோகர் குப்தா தெரிவித்தார்.

கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் வரும் 20 முதல் 22-ம் தேதி வரை லக்னோ மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து தேவையான விவரங்களைத் தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News