கிரிக்கெட் (Cricket)

U19 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

Published On 2026-02-01 20:54 IST   |   Update On 2026-02-01 20:54:00 IST
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
  • U19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.

கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பதற்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. ஹம்சா ஜஹூர் 42 ரன்னிலும் உஸ்மான் கான் 66 ரன்னிலும் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 46.2 ஓவர்கள் முடிவில் 194 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

Tags:    

Similar News