கிரிக்கெட்

ரோகித் சதம் அடிச்சா வெற்றி தான்- ஒரே டெஸ்ட்டில் சாதனை படைத்த 4 இந்திய வீரர்கள்

Published On 2024-02-19 06:06 GMT   |   Update On 2024-02-19 06:06 GMT
  • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
  • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

Tags:    

Similar News