என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா?
- கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
- அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஐபிஎல் 2026 தொடர் இந்த மாத கடைசி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வை கர்நாடக அரசு நியமித்த நிபுணர் குழுவினர் இன்று மேற்கொள்கின்றனர்.
2026 ஐபிஎல் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்துவதற்கான இறுதி அனுமதி வழங்குவதற்கு முன்னதாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்கள், அகலப்படுத்தப்பட்ட வெளியேறும் வழிகள் மற்றும் அவசர கால வெளியேற்ற வசதிகள் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள், கட்டமைப்புப் பொறியாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் அடங்கிய குழு, மைதானத்தின் கேலரி பாதுகாப்பு மற்றும் வடிகால் அமைப்புகளைச் சோதித்து வருகின்றனர்.
இந்த ஆய்வுக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஐபிஎல் தொடரின் முதல் உள்ளூர் போட்டியை சின்னசாமி மைதானத்தில் நடத்த இறுதி அனுமதி வழங்கப்படும்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அரசு பரிந்துரைத்த அனைத்துப் பாதுகாப்பு மேம்பாடுகளையும் ஏற்கனவே முடித்துள்ளதால், இன்று நடைபெறும் ஆய்வில் நேர்மறையான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






