கிரிக்கெட்

கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் உலக கோப்பைக்கு இந்தியா 100 சதவீதம் தயாராக இருக்கும்- ரஷீத் லத்தீப்

Published On 2023-08-17 07:09 GMT   |   Update On 2023-08-17 07:09 GMT
  • இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது.
  • உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

லாகூர்:

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகளில் விளையாடுகிறது.

ஆசிய கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் வீராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்.

இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். அவர் 1996 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 46 தினங்கள் உள்ள நிலையில் 4-வது வீரர் வரிசையை இந்திய அணியால் இன்னும் அடையாளம் காண இயலவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரோகித்சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

Tags:    

Similar News