search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Alert"

    • பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சியால் வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் உத்தரகன்னடா, தார்வாட், ஹாவேரி மற்றும் உடுப்பி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெல்காம் மற்றும் குடகு மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதேபோல் பாகல்கோட், கொப்பல், ஷிமோகா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் அதிக காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு மாநகரில் வானம் மேககூட்டத்துடன் காணப்படும். வருகிற 12-ந் தேதி வரை கர்நாடகாவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
    • வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.

    நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-ஐ மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2-3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.

    எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றார்.

    தேசிய தலைநகர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
    • இந்த நிலையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    இந்த நிலையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது, அந்த 4 மாவட்டங்களில், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட குறைவாகும், இயல்பை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
    • மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    திருவனந்தபுரம் நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருவனந்தபுரம் சாக்கா தோப்பமுடுக்கு பகுதியை சேர்ந்த விக்ரமன்(வயது82) என்ற முதியவர் தனது வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் இறந்துகிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது மழை தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் கேரளாவில் 14 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

    குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்பதால் நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட லாம் என்பதால் மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

    தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
    • வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும்.

    தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

    கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடி யாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கேரளாவில் வரும் 21-ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
    • கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை 31-ம் தேதி தொடங்கும் என கருதப்படும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. இந்த மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வுமையம் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு முதல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த வானிலை ஆய்வுமையம் தற்போது அதனை சிவப்பு எச்சரிக்கையாக மாற்றி அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வரும் 20-ம் தேதி வரை பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டுக்கான மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் திடீர் வெள்ளம், மண் சரிவு போன்றவை ஏற்படலாம். எனவே மலைப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை.
    • தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

    அதில், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 21ம் தேதி வரை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    கேரள, கர்நாடக கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

    • தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
    • மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இதற்காக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'கள்ளக்கடல்' என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.

    கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே கள்ளக்கடல்' எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்படுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்து உள்ளன. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்குமாறும் கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை.
    • அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

    ×