என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,000 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு 4 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

    03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480

    02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-12-2025- ஒரு கிராம் ரூ.200

    03-12-2025- ஒரு கிராம் ரூ.201

    02-12-2025- ஒரு கிராம் ரூ.196

    01-12-2025- ஒரு கிராம் ரூ.196

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல.
    • உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எந்த அரசியல் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • மதுரைக்கு தேவை மெட்ரோ ரெயில், எம்ய்ஸ், புதிய தொழில் வாய்ப்புகள்.

    சென்னை:

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

    மக்கள் முடிவு செய்வார்கள்.

    மெட்ரோ இரயில்,

    #AIIMS,

    புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

    - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார். 

    • முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை லாரன்ட் சிமன்ஸ் சமர்ப்பித்தார்.
    • மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சிறுவன் லாரன்ட் சிமன்ஸ் (வயது 15). குட்டி ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் லாரன்ட் தனது 11 வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தை முடித்தார். அடுத்த ஆண்டே அதில் முதுகலை பட்டத்தையும் பயின்றார். இந்தநிலையில் முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது. இதன்மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்கா, சீனாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகை வழங்கி அவருக்கு வேலை அளிக்க முன் வந்தன. ஆனால் அதனை மறுத்த அவர் சூப்பர் மனிதர்களை உருவாக்குவது, மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.

    • பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
    • பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.

    புதுடெல்லி:

    புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-

    பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.

    பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.

    பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.

    பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.

    இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
    • இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,

    "மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,

    நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,

    இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,

    மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

    தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார். 



    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    • தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.

    மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

    இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    ×