search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
    • அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்தது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரையில் சென்ற நிலையில் நேற்று காலை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    கடந்த வாரம் அணைக்கு வந்த கழிவுநீர் கலந்த நீரால் மீன்கள் செத்தன. நேற்று முன்தினம் இரவிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. தற்போது யாருமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மீன் பிடி தொழிலை நம்பி உள்ள 500-க்கும்மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்னம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகே மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை:

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மாநகரில் சில நாட்களாக பெய்த மழையால் மேலப்பாளையம், சேவியர் காலனி விரிவாக்க பகுதியான பிரைட்காலனியில் உள்ள ராஜா நகரில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அங்குள்ள 4-வது தெருவில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 51.10 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 62.80 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு அடி உயர்ந்துள்ளது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர், ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், காக்காசியில் 7 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான சிவப்பு மழை எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு நிற எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்த நிலையில் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 11.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    செங்கோட்டை, ஆய்க்குடியில் தலா 5 மில்லி மீட்டரும், அணை பகுதிகளான ராமநதி மற்றும் கடனாவில் தலா 2 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூரன்குடி பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது.
    • ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 4:20 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, கருமண்டபம், உறையூர் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோன்று மேலபுதூர் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக பகுதிகளில் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்தனர்.

    அதேபோன்று திருவெறும்பூர் பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1154.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று திருச்சி ஜங்ஷன் 82.8, திருச்சி டவுன் 68 , பொன்மலை 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கள்ளக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு அணைக்கட்டு 12.6,புள்ளம்பாடி 34.8,தேவி மங்கலம் 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னணியாறு டேம் 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44,நவலூர் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பர நாடு 19, துறையூர் 21.


    ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் தெருசாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டாடப்பட்டு கிடக்கிறது.

    நேற்று பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு காலி மனைகளில் வெள்ள நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் உச்சகட்டமாக இருந்தது 110 டிகிரி வரை வெயில் மக்களை சுட்டெரித்தது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிய மக்கள் நேற்று மழைக்கு பயந்து வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    • இன்று முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினமான நாளை நடைபெறும் விசாக திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஒரு வருடம் அதாவது 12 மாதம், மாத கடைசியில் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் நாளை நடைபெறும் விசாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தவாறு உள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

    மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15மணிக்கு இராக் கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருவிழாவான நாளை (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக் கால அபிஷேகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக் கிழமை) வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
    • தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் தற்போது பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது. பருவமழை காரணமாக வருகின்ற 23ஆம் தேதி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று கன முதல் அதிக கன மழை வரை பெய்யும். 22 மற்றும் 23ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே நேற்று முன்தினம் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குட்டைகளில் நீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியதால் கிராமங்கள் மழை நீரில் சூழ்ந்தது. விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. தரைப்பாலம் மூழ்கியதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் மூன்று பசு மாடுகள் உயிரிழந்தது.

    இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாக அந்தமானில் நேற்று முன் தினம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பருவ மழையின் தொடர்ச்சியாக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சுகாதாரத்துறை , வருவாய்த்துறை, பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.


    திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். கோவை மண்டல தீயணைப்பு துறை இணை ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை திருப்பூர் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் மற்றும் இளஞ்செழியன் உள்ளிட்டோருடன் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு தேவைப்பட்டாலும் செல்வதற்கான தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் திருப்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் அவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது, மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது, ஆழமான பகுதிக்குள் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக பயிற்சியுடன் கூடிய 100 கமோண்டோ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
    • அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.

    தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பிரங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர்நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.

    சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடுஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புறபாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

    • மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.
    • டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தை அடுத்த நவாச்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று மாலை 34 வயது மதிக்கத்தக்க மதுப் பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்று வாங்கிச் சென்றார்.

    அந்த மதுவை குடிப்பதற்காக பாட்டிலை திறக்க முயன்றபோது பாட்டிலில் ஒரு ஈ , ஒரு கட்டெறும்பு கிடந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் மதுக்கடைக்கு சென்று விற்பனையாளரிடம், பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள இந்த பாட்டிலில் ஈ, எறும்பு எப்படி செத்து கிடக்கிறது? என்று கேட்டுள்ளார்.

    அப்போது மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.

    இதனால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    இதனை அந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். தற்போது அவை வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விலக்கு சுந்தரம் செட்டியார் தெருவில் வசிப்பவர் சரவணன். நகை வியாபாரியான இவர் சென்னையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு பேருந்தில் செல்லும் அவர் ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசில சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் சரவணன் தனியாகவே சென்னைக்கு சென்று வருவார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை சென்ற சரவணன் சவுகார்பேட்டை பகுதியில் 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளிக் கட்டியை வாங்கிக் கொண்டு நேற்று இரவு அரசு பேருந்தில் காரைக்குடி புறப்பட்டார். பேருந்தில் தூங்கியபோதும், நகைகளை தனது கைப் பைக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

    இன்று அதிகாலை சரவணன் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து ஐந்து விலக்கு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்த சென்று கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் முதல் அந்த பகுதியில் தொடர்ந்து விடிய, விடிய அடை மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    அப்போது சரவணனை பின் தொடர்ந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தன. இதனை கவனித்த சரவணன் சாலையோரமாக நடந்து சென்றார். திடீரென அந்த வாகனங்களில் வந்த 6 பேரும் சரவணனை வழிமறித்து சுற்றி வளைத்தனர். ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கைகளில் பட்டாக்கத்தி வைத்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சரவணன் அவர்கள் பிடியில் இருந்து தப்பியோட முயன்று வேகமாக நடந்தார்.

    ஆனாலும் அவர்கள் சரவணனை கீழே தள்ளியதோடு பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை மற்றும் வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த 6 பேரும் எந்தவித சலனமும் இன்றி அங்கிருந்து தப்பிச்சென்றனர். நகைகளை பறிகொடுத்த சரவணன் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவருக்கு உதவ யாரும் வரவில்லை.

    இதைத்தொடர்ந்து சரவணன் காரைக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சரவணனுடன் விரைந்து சென்று அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. சரவணன் சென்னைக்கு நகைகள் வாங்க சென்றுவிட்டு நள்ளிரவு அல்லது அதிகாலையில் வருவதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்ம நபர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காரைக்குடியில் இன்று அதிகாலை நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    கடந்த மாதத்தில் வெளுத்து வாங்கிய கோடை வெயில் காரணமாக குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. தற்போது கோடை விடுமுறை என்பதால் அவற்றை பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த சூழலில் கத்திரி வெயில் தொடங்கிய ஓரிரு நாட்களில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த சுழற்சி காரணமாக வெப்பநிலை மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலமாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இதை தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் தெற்கே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளிலும், நீரோடைகளிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் அதிகனமழை பெய்தது.

    இதனால் கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன. நீரோடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கோடையை வாட்டி வதக்கிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக தட்ப வெப்பநிலை ஏற்பட்டுள்ளது.

    நீர்நிலைகள் நிரம்பி வருவதால் கோடை உழவு பயிரிட்டுள்ள விவசாயிகளும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கமுதி பகுதியில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கமுதி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் கிராமங்களில் பெண்கள், ஆண்கள், முதியோர்கள் அனைவரும் தள்ளு வண்டியுடன் வெகு தொலைவு சென்று தண்ணீர் எடுக்கும் சூழ்நிலை இருந்து வந்தநிலையில் திடீரென பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், அபிராமம், கோவிலாங்குளம், புதுக்கோட்டை, மண்டலமாணிக்கம், பெருநாழி, கிழராமநதி ஆகிய பகுதியில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது.

    ராமேசுவரம்,பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் காணப்பட்டது. நேற்று பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியது. இந்த பகுதியில் மழை பெய்தால் மழைநீர் தேங்கி விடுவதாகவும் 500 மீட்டர் வரை சாலையை உயர்த்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று மழையின்றி மிதமான வெயில் காணப்பட்டது.

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக பெய்த மழையின் அளவு (மி.மீ) பின்வருமாறு:-

    தொண்டி-96.40, தீர்தண்டதானம்-78.40, வட்டானம்-64.80, திருவாடானை-44.00, தங்கச்சிமடம்-22.00, மண்டபம்-20.60, ராமேசுவரம்-19.00, பாம்பன்-15.20, கமுதி-11.40, கடலாடி-9.40, ஆர்.எஸ்.மங்கலம்-3.00, ராமநாதபுரம்-2.00, பரமக்குடி-1.50, பல்லமோர்குளம்-1.50.

    • வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது அணைக்கு நீர் வரத்து 49.63 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோடை மழை பெய்து சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×