search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வாசம் விமர்சனம்"

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara
    கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

    10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.



    இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். 

    அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.



    நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



    டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் `விஸ்வாசம்' குடும்பத்தின் தேவை. #Viswasam #ViswasamReview #ViswasamFromToday  #ViswasamFDFS #ViswasamThiruvizha #BlockbusterViswasam #AjithKumar #Nayanthara 

    ×