search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை"

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்ணப்பித்துள்ளார். #MayilsamyAnnadurai #MaduraiKamarajUniversity
    சென்னை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் செல்லதுரை நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் தவறு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நீக்கம் செய்து கடந்த ஜூன் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்பிறகு யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. அங்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இதற்கான தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களின் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பிரபல விஞ்ஞானிகள், கல்வித்துறை வல்லுநர்கள் என பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பிரபல இஸ்ரோ விஞ்ஞானியும் மங்கள்யான், சந்திராயன் விண்வெளி திட்டத்திற்கு இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

    மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

    இவர் தவிர நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா வம்சாவழியை சேர்ந்த மலேசியா பேராசிரியர், திருவனந்தபுரம், ஐதராபாத், ஆந்திரா, புதுவை, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.



    இவர்களை தேர்வு செய்வதற்காக தனியாக தேர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.கே. ஓஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் 3 மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு கவர்னர் துணைவேந்தரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பார்.  #MayilsamyAnnadurai #MaduraiKamarajUniversity


    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார். #mayilsamyannadurai
    கரூர்:

    கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். 

    சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர்  மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #mayilsamyannadurai
    உலக அளவில் செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடத்தில் இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

    சிறு வயதில் எனது தந்தையுடன் இலக்கிய நிகழ்வுகளுக்கு போவேன். அங்கு தமிழ் பாடல்கள் பாடுவார்கள். அப்போது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தமிழான இயல், இசை, நாடகம் என்பது சரியா எனக்கேட்டேன். நான்காவது ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்தேன். அது அறிவியல் தமிழாக இருந்தது.

    4 ஆண்டுகளுக்கு ஒரு செயற்கைக்கோள் என்றிருந்த நிலையில் மாதம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவோம் என திட்டமிட்டு, கடந்த 40 மாதங்களில் 36 செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். தமிழால் முடியும், தமிழ் படித்தால் முடியும் என்பதை செய்து காட்டினோம். உலக அளவில் செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. முதல், இரண்டாவது இடங்களுக்கு வரத்தயாராக இருக்கிறோம்.

    அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பின. இதுவரை 51 முறை செயற்கைக்கோள் அனுப்பிய நிலையில், 30 முறைதான் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 40 சதவீதம்தான் வெற்றி பெற்றனர். அமெரிக்கா 5-வது முயற்சியிலும், ரஷியா 9-வது முயற்சியிலும் வென்றார்கள். ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இன்னும் வெற்றி பெறவில்லை.

    இந்திய அரசு செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்ப திட்டமிட்ட போது, குறைந்த அளவு பணம், குறைந்த கால அளவு வழங்கியது.

    17 மாதங்களில் இந்தியாவில் உருவான மங்கள்யான் செயற்கைக் கோளை முதன்முறையாக அனுப்பினோம். சரியான நேரம், இடம், வேகம், திசை எனக் கணக்கிட்டு, செவ்வாய்க்கு செயற்கைக் கோளை முதன்முறையாக அனுப்பி வெற்றி பெற்றோம். தற்போது செவ்வாயில் மழை பெய்கிறதா என்ற ஆராய்ச்சி நடைபெறுகிறது.

    இந்தியா முன்னேறுவதை உலக நாடுகள் கவனிக்கின்றன. நம்மால் காற்று இல்லாமல் எவ்வாறு 10 நிமிடம் இருக்க முடியாதோ, அதேபோல் செயற்கைகோள்கள் இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×