search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனம்பாக்கம்"

    மீனம்பாக்கத்தில் நெருக்கடியை குறைக்க தாம்பரத்தில் இருந்து சிறிய விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள் நாட்டு முனையம், வெளி நாட்டு முனையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே 70 முதல் 80 பயணிகள் வரை பயணம் செய்யும் சிறிய விமானத்தை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக விமான நிலைய அத்தாரிட்டி அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    இது தொடர்பான ஆலோசனை முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடந்துள்ளது. இதுபற்றி இந்திய விமானப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

    மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
    சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதால், மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்படுகிறது.
    ஆலந்தூர்:

    சென்னையில் ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமால் இருக்க ரெயில்வே கேட் மூடப்பட்டு சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே ஜி.எஸ்.டி. சாலையையும், பழவந்தாங்கல் பகுதியையும் இணைக்கும் ரெயில்வே கேட் 16-ந் தேதி (அதாவது இன்று) முதல் மூடப்படுகிறது. அதன்பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பழவந்தாங்கல் மற்றும் மீனம்பாக்கம் சுரங்கப்பாதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரெயில்வே கேட் மூடப்படுவதால், தண்டவாள பகுதியில் ரெயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தபிறகு, சென்னை மாநகராட்சியிடம், ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்கும். அதன்பின்னர் சுரங்கப்பாதைகளை சாலைகளுடன் இணைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
    ×