search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தற்கொலை முயற்சி"

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தற்கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சக்திவேல் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது கவரிங் கடையில் வேலைபார்த்து வருகிறார். வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

    இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் வார்டனாக பணிபுரிந்துவரும் நித்யா என்பவர் மாணவியை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது.
    • தாரமங்கலம் போலீசார் விடுதி வார்டன் நித்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை கிராமம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மாணவி உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் 25-ந்தேதி முதல் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    அந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்துவரும் நித்யா என்பவர் மாணவியை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியில் இருந்து விடுதிக்கு வந்தவுடன் தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பூச்சி கொல்லி விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்தார்.

    இதுபற்றி தனது தோழியிடம் கூறி மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், அவரை மீட்டு வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

    இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விடுதி வார்டன் நித்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெற்றோருக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார்.
    • வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கோவிந்தப்பன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி. தேவிசெட்டிகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியின் பெற்றோர் சண்டை போட்டுள்ளனர்.

    இதுபோன்று அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவரும் அந்த மாணவியை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார்.
    • மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி நேற்று மாலை பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவர் இடுப்பு எலும்பு முறிந்தும், விலா எலும்பு மற்றும் கால் மூட்டு பகுதிகளில் எலும்பில் விரிசல் ஏற்பட்டு படுகாயத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார். அப்போது வலியால் துடித்த நிலையில், நான் வீட்டில் செல்லப்பிள்ளை. பள்ளி ஆசிரியை ஒருவர் என்னை திட்டியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் மனமுடைந்து 2-வது மாடியில் இருந்து குதித்தேன் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதே போல் கல்வி அதிகாரிகளும் விசாரித்தனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் மாணவி எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    போலீசார் விசாரணையில், மாணவி பயிற்சி தேர்வில் பிட் அடிக்க பேப்பர் வைத்திருந்ததாகவும், அதை உடன்படிக்கும் தோழிகள் ஆசிரியையிடம் கூறியதால் ஆசிரியை கண்டித்துள்ளார். நாளை பெற்றோரை அழைத்து வரவும் கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சல் ஏற்பட்டு வாழ்வா? சாவா? என யோசித்து கொண்டே தோழி ஒருவரிடம் இரண்டு விரல்களை காட்டி தொடும்படி கூறியுள்ளார். விரலை தொட்டவுடன் சற்றும் யோசிக்காமல் மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மருத்துவமனையில் இருக்கும் பெற்றோரிடம் இன்று மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    • மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்று பள்ளிகூட வகுப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது பெரியப்பா படிக்க வைத்து வருகிறார். அவர் தினமும் மாணவியை பள்ளியில் விட்டு வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். பள்ளியில் இறை வணக்கத்துக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளிக்கூடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 2 கால்களும் முறிந்தன.

    இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். சக மாணவிகள் கதறி அழுதனர்.

    உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இது பற்றிய தகவல் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவியிடம் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்து கொடுக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் டி.ஆர்.ஓ. மேனகா, மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, சூப்பிரண்டு டாக்டர் தனபால், துணை போலீஸ் கமிஷனர் சவுமியா உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவிக்கு ஆறுதல் கூறினார்கள். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×