search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்று பள்ளிகூட வகுப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது பெரியப்பா படிக்க வைத்து வருகிறார். அவர் தினமும் மாணவியை பள்ளியில் விட்டு வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். பள்ளியில் இறை வணக்கத்துக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளிக்கூடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 2 கால்களும் முறிந்தன.

    இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். சக மாணவிகள் கதறி அழுதனர்.

    உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இது பற்றிய தகவல் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவியிடம் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்து கொடுக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் டி.ஆர்.ஓ. மேனகா, மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, சூப்பிரண்டு டாக்டர் தனபால், துணை போலீஸ் கமிஷனர் சவுமியா உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவிக்கு ஆறுதல் கூறினார்கள். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×