search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாங்காடு"

    மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
    பூந்தமல்லி:

    மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

    இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

    காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    மாங்காட்டில் 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சட்ட விரோதமாக விற்கப்படுவதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் கோவையில் இயங்கிய குட்கா தொழிற்சாலையை போலீசார் கண்டு பிடித்து ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் மாங்காடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மாங்காடு அருகே பரணிபுத்தூரை அடுத்த பெரிய பணிச்சேரியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த ஏஜெண்டு முருகன், ஊழியர்கள் தணிகாசலம், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் குட்கா போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கனகலிங்கம் என்பது தெரியவந்தது.

    குடோன் உரிமையாளரான பரணிபுத்தூரை சேர்ந்த புஷ்பகுமாரிடம் கனகலிங்கம் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் குட்காவை மொத்தமாக வாங்கி பதுக்கி பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

    கனகலிங்கம் குட்காவை பதுக்கியது குறித்து குடோன் உரிமையளர் புஷ்பகுமாருக்கு 3 மாதத்துக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அவர் அதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.

    கனகலிங்கத்திடம் அதிக வாடகை வாங்கிக் கொண்டு குட்காவை பதுக்க அனுமதித்துள்ளார். இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளர் புஷ்பகுமாரையும் கைது செய்தனர்.

    தலைமறைவான மொத்த வியாபாரியான கனகலிங்கம், உடந்தையாக இருந்த அவரது தம்பி தர்மன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாங்காட்டில் உள்ள இந்த குடோனுக்கு கோவையில் இருந்து குட்கா போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews #Gutkha
    ×