search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு பயணம்"

    • உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.
    • அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை இப்போதுதான் முழுமையாக அறிந்து கொள்ளும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய பலரை 12 மணி நேரம் போராடி படகு மூலம் அவர்களை மீட்ட நிகழ்வு 'திக்திக்' திகில் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    அந்த 'திடீர்' மழை கடந்த 17-ந்தேதி தொடங்கி மறுநாள் விடியும் வேளை. காயல்பட்டினத்தின் கடற்கரை பகுதியான சிங்கித்துறை மீனவர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் ஆக்ரோசமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

    தங்களின் உயிரையும் முடிந்த வரையிலான உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முந்தைய கடைசி தருணம் அது.

    அப்போது அங்குள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் இருந்து அவசர போன் அழைப்பு வந்துள்ளது. அதில், 'ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர்பந்தல் என்கிற குக்கிராமத்தில் அனைத்து வீடுகளும் மூழ்கிய நிலையில் அங்குள்ள மக்கள் மொட்டை மாடியில் நின்று உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு படகு தேவைப்படுகிறது. அதற்கு உடனே ஏற்பாடு செய்யவும்.

    அங்கிருந்து படகையும் படகை செலுத்துபவர்களையும் ஆறுமுகநேரிக்கு ஏற்றி செல்ல மினி லாரி வந்து கொண்டு இருக்கிறது' என்று அந்த அதிகாரி பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவரான யாசர் அராபத் (39) தனது தந்தை சீனிக்கனி உள்ளிட்ட 15 பேரை திரட்டி படகுடன் தயார் நிலையில் இருந்துள்ளார். ஆனால் படகையும் ஆட்களையும் ஏற்றி செல்ல வேண்டிய வாகனம் வழியில் ஆங்காங்கே வெள்ளத்தால் ஏற்பட்ட இடையூறுகளை தாண்டி சிங்கித்துறைக்கு வருவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டது. இதன்பின் உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இவர்களின் வரவை எதிர்பார்த்தபடி ஆறுமுகநேரி போலீஸ் செக்போஸ்ட் அருகே அரசு அதிகாரிகள் தவிப்பு நிலையில் இருந்துள்ளனர். ஆனால் இதற்குள் இருட்டிவிட்டது. பேய் மழையும் தனது வீரியத்தை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.

    இதனால் மீட்பு பணியின் முயற்சியை மறுநாள் விடிந்த பிறகு தான் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கேயே காத்திருந்து சூரிய வெளிச்சம் பரவ தொடங்கியதும் பார்த்தபோது தான் தெரிந்தது நிலைமையின் விபரீதம்.

    சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலான வயல் பகுதிகள் முழுவதும் சுனாமி அலைபாயும் கடல் போல வெள்ளத்தால் மிரட்டி கொண்டிருந்தது.

    இந்த சவாலை சந்திக்க சிங்கித்துறை மீனவர் குழுவினர் தயாராகினர். தங்களின் படகை சாலையில் இருந்து வயல்வெளி வெள்ளத்திற்குள் இறக்கி தங்கள் இலக்கை நோக்கி லாவகமாக பயணிக்க தொடங்கினர்.

    ஆனால் அந்த பயணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஆபத்தை உணர்த்தி எச்சரிக்கை செய்தது. வெள்ள நீரின் ஓட்டம் அதி வேகமாகவும் பள்ளம் எது, மேடு எது, புதர் காடு எது? என்றெல்லாம் தெரியாத வகையில் அங்கு படகை செலுத்துவது 'கரணம் தப்பினால் மரணம்' என்கிற கதை தான். கூடுதலாக மற்றொரு ஆபத்தையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.


    அதாவது படகை இயக்கும் முக்கிய பாகமான காற்றாடி போன்ற விசையில் புதர்களும் துணி போன்ற பொருட்களும் சிக்கிக் கொண்டால் படகின் இயக்கம் தடைப்பட்டு நீரில் அவர்கள் அடித்து செல்ல நேரிடும். இப்படியான நெருக்கடி சூழலில் தான் அவர்களின் சாகச பயணம் தொடர்ந்தது. சுமார் 40 நிமிட நேரத்தையும் 4 கிலோமீட்டர் தூரத்தையும் கடந்த பிறகு கண்ணில் பட்டனர் தண்ணீர் பந்தல் கிராமத்தின் அப்பாவி மக்கள்.

    நான்கு தெருக்களில் உள்ள வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் ஒரு சில வீடுகளின் மொட்டை மாடிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் கொட்டும் மழையில் தங்களின் கண்ணீரை கரைத்த படி நின்று கொண்டிருந்தனர்.

    இப்படியான சூழ்நிலையிலும் ஓரளவு தப்பிய தங்களின் வளர்ப்பு பிராணிகளான ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகியவற்றையும் தங்களோடு மாடியில் ஏற்றி வைத்திருந்தது காண்போரை நெகிழச் செய்த காட்சியாக இருந்துள்ளது.

    மீட்பு குழுவினரை கண்ட அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களாக அழுகையும் ஆனந்தமும் கலந்து கூக்குரல் இட்டுள்ளனர். மீட்பு குழுவினரிடம், ' சாப்பாடு கொண்டு வந்தீங்களா? குடிக்க தண்ணீர் இருக்கா?' என்று தங்களின் 3 நாள் பசியையும் தாகத்தையும் உணர்வால் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களிடம் மீட்பு குழுவினர் உங்களை மீட்க தான் வந்துள்ளோம்.

    உங்களுக்கான உணவு ஏற்பாட்டுடன் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்று கூறி அவர்களை ஒரு முறைக்கு 30 பேர் என்கிற விதத்தில் மொத்தம் 240 பேரை மீட்டு ஆறுமுகநேரி யில் கொண்டு கரை சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    தங்களின் மீட்பு பணியை நிறைவேற்றிவிட்ட நிலை யில் தாங்களும் படகுடன் கரையேற தயாரான நிலையில் தான் அந்த மீட்பு குழுவினருக்கு மீண்டும் ஒரு சவால், தகவலாக வந்தது. சாகுபுரம் உப்பள பகுதியில் உப்பு தொழிலாளர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்கள் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. அவர்களை மீட்பதற்காக தனியார் தொழிற்சாலையின் மீட்பு குழுவினர் எவ்வளவோ போராடியும் அதற்கு பலன் கிடைக்காமல் பரிதவிப்பே தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில்தான் சிங்கித்துறை மீனவ குழுவினரின் இரண்டாம் அத்தியாய சாகச பயணம் அத்திசையை நோக்கி தொடங்கியது.

    ஆனால் இப்போது அவர்கள் அடுத்தடுத்து முன்பை விட பெரும் சோதனைகள் பலவற்றை சந்திக்க வேண்டியதாயிற்று. நடுவழியில் சேறு போன்ற ஒரு பகுதியில் படகு சிக்கியது. அங்கிருந்து நீந்தி சென்று வேறு ஒரு இடத்தில் கயிறை கட்டி படகு மீட்கப்பட்டுள்ளது. பிறகு தொடர்ந்த பயணத்தில் பழுது காரணமாக படகு நீரின் வேகப் போக்கில் தள்ளாட தொடங்கியுள்ளது. சுதாரித்துக் கொண்ட மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு நங்கூரமிட்டு படகை நிலைநிறுத்தி பழுதை சரி செய்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும் என்கிற தருணத்தில் தான் சற்று தூரத்தில் இருந்து சிலரின் கூக்குரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நோக்கி படகு பாய்ந்து சென்றது. அங்கே அவர்கள் கண்ட காட்சி ' பகீர் ' ரகம். பெருங்கடல் கொந்தளிப்பின் நடுவில் ஒரு மேஜையில் நெருக்கடியாக 10, 15 பேர் நிற்பதை போல இருந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் இங்கு உப்பள பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் அன்று இரவு காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வந்துள்ளது.

    ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து சுமார் 10 அடி உயரத்தில் குறுக்கே நீளமாக இருந்த ராட்சத இரும்பு குழாய் ஒன்றில் 'தக்கி முக்கி' ஏறியுள்ளனர். ஆனாலும் வெள்ளம் அவர்களை விட்டு விடுவதாக இல்லை. அந்த குழாய்க்கும் மேலாக பாயத்தொடங்கியது. மரண பீதியில் அவர்கள் ஒருவரையொருவர் அடுத்தடுத்து சங்கிலி போல் கைகளை கோர்த்துக்கொண்டு உயிர் போராட்டத்தில் நின்று தவித்துள்ளனர். ஒருவர் சறுக்கினாலும் ' கூண்டோடு கைலாசம்' என்கிற நிலைதான்.


    அந்த நேரத்தில்தான் மற்றொரு ஆபத்தும் அவர்களை நோக்கி வந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி கொடிகள் அடங்கிய புதர்கள் அவர்கள் நின்றிருந்த குழாயில் வந்து சிக்கியுள்ளன. இப்படியே அடுத்தடுத்து சில மரக்கிளைகளும் துணிகளும் வந்து அங்கு சிக்க அவற்றையே தங்கள் கால்களால் அழுத்தி அழுத்தி உருட்டி திரட்டி ஒரு 'பிளாட்பாரம்' போல் அமைத்துள்ளனர். அதன் மீது முழங்கால் அளவு தண்ணீரில் கடைசி கட்ட நம்பிக்கையில் இருந்த போது தான் அவர்களுக்கான மறுவாழ்வு அங்கே மீட்பு குழுவினரின் படகு வடிவில் வந்துள்ளது. அவர்கள் மீது மோதி விடாமல் ஜாக்கிரதையாக படகை நங்கூரமிட்டு மீட்பு குழுவினர், தத்தளித்த ஒவ்வொருவரையும் பக்குவமாக படகில் ஏற்றினர். 3 நாட்களாக உயிர் தவிப்பில் கிடந்த அந்த 13 பேரில் ஒருவர் படகில் மயங்கி சரிந்தார். மற்றவர்களும் கண்ணீர் விட்டு கதறியபடி படகில் தொய்ந்து கிடந்தனர்.

    படகு மீண்டும் விரைந்தது கரை நோக்கி. இப்போதும் அவர்களின் பயணம் கரடு முரடானதாகவே இருந்தது. ஆனால் அந்த சிரமம் மீட்பு குழுவினருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவர்கள் நெஞ்சம் ஒருவித பரவசத்தில் நிறைந்திருந்தது. மறுகரையில், 'என்ன ஆனதோ, ஏது ஆனதோ?' என்று கையை பிசைந்தபடி நின்றிருந்த காவல்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் வெற்றிகரமாக படகு மீண்டு வருவதையும் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்டு வருவதையும் கண்டனர். துரிதமாக செயல்பட்டு அந்த உப்பள தொழிலாளர்களுக்கு உரிய அவசர உதவிகளை செய்து தேற்றினர்.

    சிங்கித்துறை யாசர் அராபத் தலைமையிலான கலீல் ரகுமான், மைதீன், நபீல்முஸ்தபா, அர்னால்டு, அந்தோனி, சலீம் கான், சபூர்தீன், சம்சு மரைக்காயர், மூஸா, வாசிம் அக்ரம், முத்து, செய்யது அபுசாலி, ஷேக் முகைதீன், அஜீஸ் ஆகியோரை கட்டி தழுவி பாராட்டுதலை தெரிவித்தனர்.

    இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு கிராம மக்கள் 240 பேரையும் ஜீவமரண போராட்டத்தில் இருந்த 13 தொழிலாளர்களையும் வியூகம் வகுத்து மீட்க செயல்பட்ட மீனவர் யாசர் அராபத் இது பற்றி கூறிய போது, 'எங்களின் கடல் பயணத்தில் புயல், பெரு மழை, படகின் பழுது போன்ற பல சங்கடங்களை சந்தித்து பழகி உள்ளோம்.

    அப்படிப்பட்ட எங்களுக்கே பீதியை ஏற்படுத்தும் வகையில் இந்த மழை வெள்ளத்திலான எங்களின் பயணம் அமைந்தது. ஆனாலும் பல உயிர்களை காப்பாற்ற செல்கிறோம் என்கிற எண்ணமே எங்களுக்கு துணிச்சலை தந்தது. அனைவரையும் உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

    உயிரை பணயம் வைத்து செயல்பட்ட இந்த மீட்பு குழுவினரின் அறிய இந்த செயல்பாடு வெளி உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியாக இப்பகுதியில் மின்சாரமும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம். தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இப்படியான சாகச செயலில் ஈடுபட்ட சிங்கித்துறையை சேர்ந்த இந்த மீனவ மீட்பு குழுவினரை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று காயல்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெஸ்முதீன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.
    • வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மண்டல மேலாளர் அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

    இதில் முதன்மை செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் காகர்லா உஷா மற்றும் பொது மேலாளர் கமலா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் வகையில் கவர்ந்திழுக்கும் மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.

    முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம், வாலாங்குளம் உள்ளிட்ட 9 இடங்களில் படகு குழாம்களை சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.

    வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.

    இதில் இந்த ஆண்டு 42 லட்சத்து 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    2023-2024-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்தில் மட்டும் 27 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு கா.ராமச்சந்திரன் கூறினார்.

    • விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
    • கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடையால் பேரூராமட சிக்குட்பட்ட களியல் கிராமம் வழியாக செல்லும் கோதையாறு ஆற்றுப்பகுதி யில் படகுதளம் அமைக்கப்பட்டு பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த படகுதளத்தில் கடையால் பேரூராட்சி வாயிலாக படகுகள் டெண்டர் விடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. படகு தளத்தில் 10 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 2 உந்து படகுகளும், 4 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 10 பெடல் படகுகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விளவங்கோடு தாசில்தார் ஆய்வு மேற்கொண்டதில் பயணம் மேற்கொள்ப வர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் பயணம் செய் வது கண்டறியப்பட்டது.

    எனவே, உரிய நிபந்தனைகளை தவறாது பின்பற்றி படகுகளை இயக்குவதை கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை படகில் அனுமதிக்க கூடாது. படகில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனும திக்கப்பட்ட எண்ணிக் கையை விட கூடுதலான படகுகள் கோதையாறு ஆற்றுப்பகுதியில் செல்வதை அனுமதிக்க கூடாது. காலாவதியான படகுகளை அனுமதிக்க கூடாது. மேற்படி படகின் உறுதித் தன்மையை சம்பந்தப்பட்ட அலுவவர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்வதை தொடர்ந்து கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டுமென கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த லின்படி, விளவங்கோடு தாலுகா தாசில்தார் குமாரவேல் படகு தளத்தில் உரிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    • ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேசு வரத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400பேர் 60 விசைப்ப டகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் காவல்துறை, கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்கு உட்பட்டு அனுப்பப்படுவார்கள். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.

    இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட காவல் துறை, கடற்படை மற்றும் மீன்வளத்துறை உரிய பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், துணை காவல் கண்காணிப் பாளர் உமாதேவி, ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×