search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை திருட்டு"

    • முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது.

    அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் கோவிலில் இருந்த கருப்பசாமி சிலையை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலில் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் கருப்பசாமி சிலையை வீசி சென்றுள்ளனரா என ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
    • திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 ஐம்பொன் சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 4 சிலைகளும் உள்ளது.

    இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி குமரவேல் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளனர்.

    இதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.

    இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் கோவில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஐம்பொன் சிலைகள் உள்பட 7 சிலைகள் திருட்டு போயியுள்ளதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

    திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் கோவில் முன்பு ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் முழுவதும் பார்வையிட்டனர். சிலைகள் திருடப்பட்ட அறைக்குள் சென்று, தடயங்கள் சேகரித்தனர்.

    கொள்ளை குறித்து, பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.
    • கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது.

    நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிப்பக்க பூட்டுகள் உடைத்து கதவுகள் திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள ஒன்றரை அடி உயரம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டனர்.

    கோவிலில் முன்பக்கம் இரும்பு கிரில், மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதேபோல மூலஸ்தானத்திலும் இரும்பு கதவு, மரக்கதவு உடைக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் ஆன வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிலைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

    உடைக்கப்பட்ட பூட்டுகள் அனைத்தையும் கோவிலின் அருகே வீசி உள்ளனர். கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் கோவில் உண்டியல் பணம் தப்பியது.

    மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் செவ்வாய்சந்தை பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
    • சிலை திருட்டில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் செவ்வாய்சந்தை பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பித்தளையால் செய்யப்பட்ட 1.5 அடி உயரமுள்ள ஹயக்ரீவர் சாமி சிலை, பாவை விளக்கு ஆகியவை திருட்டு போனதாக, கோவிலின் குருக்கள் விஸ்வநாதர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சாமி சிலையுடன் ஒருவர் நின்று கொண்டு இருப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கே சாமி சிலையுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் ஓமலூர் அருகேயுள்ள சிக்கனம்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், அவர் வைத்திருந்தது ஓமலூர் சந்தைப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்த 1.5அடி உயர ஹயக்ரீவர் பித்தளை சிலை, பாவை விளக்கு என்பது தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து ஈஸ்வரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி சிலை எங்கு கொண்டு செல்லப்படுகிறது? சிலை திருட்டில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைதான ஈஸ்வரன் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×