search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் நெருக்கடி"

    • கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
    • தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்

    அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.

    சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.

    ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.

    • குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேருந்துகள் முலம் பயணம்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற  காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 


    நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
    • புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கையுடன்அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார். அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, பால்தாக்கரே பெயரை பயன்படுத்த உத்தவ் தாக்கரே எதிர்ப்பு.
    • தடை கோரி, தேர்தலை ஆணையத்திடம் முறையீடு செய்ய சிவசேனா முடிவு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்  தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாஹேப் என்ற பெயரில் புதிய அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து பேசிய அதிருப்தி எம்எல்ஏ தீபக் வசந்த் கேசர், தங்கள் முகாமில் இருந்து யாரும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றார். மேலும் வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டமில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்கள் அணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தங்கள் அணித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, சிவசேனா மற்றும் அதன் நிறுவனர் பால்தாக்ரேவின் பாலாசாஹேப் என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பால்தாக்கரேவும், சிவசேனாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா மற்றும் பால்தாக்கரே பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்ககோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வதோதராவில் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை, ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், அவர்களது சந்திப்பு நடைபெற்ற போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வதோதராவில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா தொண்டர்களை விடுவிக்க தான் போராடுவதாகவும், இந்த போராட்டம் சிவசேனாக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    ×