என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNagar"

    • தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
    • பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓ

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் விற்பனை படுஜோராக உள்ளது.

    வழக்கம்போல தி.நகரில் தினமும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    வாகனங்களில் வரும் மக்கள், வாகனங்களை பல கிலோ மீட்டருக்கு வெளியேவிட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொது மக்களுக்கு வசதியாகவும், தீபாவளி கூட்ட நெரிசலையொட்டியும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
    • 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    4வது மாடியில் உள்ள ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

    3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.நகரில் பிரபல ஜவுக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பனகல் பூங்கா எதிரே உள்ள ராமகிருஷ்ணா மெயின் வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை நிறுத்தலாம்.
    • பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி புத்தாடைகள் வாங்க ஜவுளிக்கடைகளில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.

    சென்னையின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. சாதாரண நாட்களிலேயே இந்த பகுதியில் கூட்டம் அலைமோதும்.

    தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க தி.நகர் பகுதிக்கு சென்னை புறநகர் பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசலால் திக்குமுக்காடும் நிலை உள்ளது.

    இதையடுத்து தி.நகரில் தீபாவளியை முன்னிட்டு வாகன நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் 4 இடங்களை ஒதுக்கி உள்ளனர்.

    இதில் பனகல் பூங்கா எதிரே உள்ள ராமகிருஷ்ணா மெயின் வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை நிறுத்தலாம். பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் சோமசுந்தரம் விளையாட்டு திடலில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நிறுத்தம், தண்டபாணி தெருவில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் தி.நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    மதுரை மேலூரை சேர்ந்த மாணவர், ஷாருக்கான். இவர் மதுரையில் உள்ள மத்திய அரசு தொழில் நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த கல்லூரி தொடர்பான விழா கடந்த சில தினங்களாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார்.

    சென்னை தி.நகர் நடேசன் பூங்காவின் பின்புறம் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இங்கிருந்து தினமும் கல்லூரி விழாவுக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் ஷாருக்கான், அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவர் ஷாருக்கான் தற்கொலை குறித்து மதுரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.

    ×