search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrated"

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். 

    மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலைஞர் சிலை திறக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் தூத்துக்குடி 3-வது இடத்தை பிடித்தது. 
    உங்கள் ஒத்துழைப்பால் தான் அது நடந்தது. 

    கைரிக்‌ஷா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது தி.மு.க. அதனை பின்பற்றி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து உள்ளது. 

    எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தது தமிழகம்தான். அதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்தான் காரணம். தற்போது முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். நம் கொள்கைகளை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அரசின் திட்டங்களை பரப்ப வேண்டும். தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தி.மு.க. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும், தி.மு.க கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். 

    அன்றைய தினம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்குவது, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் சுசீ.ரவீந்திரன், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி உமாதேவி, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×