என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் நலக்கூட்டணி"
- ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது.
- எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி என்ற 3-வது அணி வலுவாக உருவானது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அதோடு வெறும் 6.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மண்ணை கவ்வியது. அ.தி.மு.க. 136 இடங்களிலும், தி.மு.க. 98 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த கூட்டணியால் வெற்றி பெற வேண்டிய தி.மு.க தோல்வி அடைந்து, அது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது என்று இன்றும் தேர்தல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த படுதோல்விக்கு பிறகு, மக்கள் நல கூட்டணி அடியோடு கலைக்கப்பட்டது. அதன்பின் தே.மு.தி.க. தவிர இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல் என அனைத்திலும் வெற்றி மகுடம் சூட்டி வருகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கூட்டணியை உடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டது.
ஆனால் பழக, பழக பாலும் புளிக்கும் என்பதுபோல இப்போது தி.மு.க. கூட்டணியிலும் திரைக்கு பின் இருந்த சலசலப்புகள் பொது வெளியில் வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம், தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை பொது வெளியில் வைத்து வருகிறார். தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கூட்டணி கட்சிகளால் தி.மு.க. வெற்றி பெறுகிறது என்றும் பகிரங்கமாக கூறினார். இது தி.மு.க.வுக்கு சற்று ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.
இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 2015-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி தொடங்க அச்சாரமிட்டது. இப்போது, அதேபோல மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக அந்த கட்சி விரும்புகிறது என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் இதுவரை மவுனமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி பேச தொடங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் சிறிய கட்சிகளை பொறுத்தவரை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என்று எண்ணுகின்றனர். மேலும் அவர்கள் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். நமக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகின்றனர். இது சராசரியாக ஒவ்வொரு கட்சியின் ஏக்கம் தானே? தேன் எடுப்பவன் அதனை ருசிக்க கூடாது என்றால் எப்படி? அதுபோலத்தான் இதுவும்.
எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு. அந்த அடிப்படையில்தான் மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆட்சியில் பங்கு என்று கோஷமிடும் திருமாவளவன், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறை சொல்லும் கம்யூனிஸ்டு, கமல்ஹாசனுக்கு கொடுத்த மேல்சபை எம்.பி. சீட்டை வைகோவுக்கு கொடுத்து இருக்கலாமே என்று ஏக்கப்படும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைத்து மக்கள் நலக்கூட்டணி உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் இந்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவற்றையும் சேர்த்து, அதில் த.வெ.க. தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்று விஜய் கட்சியில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகர் சர்வே எடுத்துள்ளார்.
அதில் வெற்றி உறுதி என்ற தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. எனவே இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் திரைக்கு பின்னால் பேசப்பட்டு வருகிறது. அதாவது கூட்டணி அமைத்து போட்டியிடலாம், வெற்றிக்கு பிறகு அதிகாரத்தையும் ருசிக்கலாம் என்று ஆசை வலை வீசப்படுகிறது.
மேலும், தி.முக., அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மீண்டும் சாத்தியமா? என்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே இதற்கான பதில்.






