என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மலிங்கேஸ்வரர் கோவில்"

    • வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்காக தீர்வு கிடைக்க வேண்டி தர்மலிங்கேஸ்வரரை நாடி வருகிறார்கள்.

    தர்மலிங்கேஸ்வரை வழிபட்டு தொடர்ந்து கிரிவலம் சென்றால் குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சினை, வீடு கட்ட உள்ள தடை மற்றும் திருமண தடை போன்ற தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். தர்மர் வந்து வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்தும், மலர்கள் வாங்கி கொடுத்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நினைத்த காரியம் கைகூடும்: தர்மலிங்கேஸ்வரரை வழிபட்டால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

    திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    குழந்தை பாக்கியம்: குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தொழில் விருத்தி: தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, விருத்தி அடையும்.

    கஷ்டங்கள் நீங்கும்: வாழ்வில் உள்ள கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.

    நோய் நீங்கும்: உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் நீங்கி, ஆரோக்யம் மேம்படும்.

    பாவங்கள் நீங்கும்: இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்.

    சகல தோஷங்களும் நீங்கும்: கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    • வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
    • சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.

    அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.

    அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.

    மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     

    வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.

    மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.

    இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.

    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.

    வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.

    நான்கு கால பூஜைகள்

    மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.

    முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.

    • மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது.
    • சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைவாழ் மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறார். முன்னொரு காலத்தில் புதுப்பதி, சின்னாம்பதி, வெள்ளியங்கிரி போன்ற இடங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் படியேறும் வழியில் அடியார்சாமி என்ற சித்தர் சன்னதி உள்ளது. அந்த சன்னதியிலும் மலைவாழ் மக்கள் அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலைவாழ் மக்கள் பல இடங்களுக்கு பிரிந்து சென்று வாழ்ந்து வந்தாலும் தற்போதும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். சிலர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தி இங்கு வந்து வழிபடுவதை காண முடிகிறது.

    மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. மலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

    இந்தநிலையில் அடியார்சாமி சித்தர் சிலையுடன் சன்னதி இருப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இதனால் மலையேறும் பக்தர்கள் அடியார்சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அவருக்கும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

    • கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
    • கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.

    கிரிவலம் செல்லும்போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் வருமாறு:-

    குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.

    ஆண்கள் வேட்டி, துண்டு அணிந்து கொண்டு வலம் வரலாம். பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் வைத்து வலம் வர வேண்டும்.

    மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.

    போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.

    தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.

    யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.

    கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.

    கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை வைத்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.

    பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம்.

    • திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது.
    • வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    திருவண்ணாமலைக்கு இணையான தலமாக கருதப்படுவது கோவை மாவட்டம் மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமியை வணங்கி கிரிவலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தான் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடிய இடமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

    கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது. திருவண்ணாமலையில் தினந்தோறும் கிரிவலம் செல்லலாம். ஆனால் இங்கு பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காரணமான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மற்ற நாட்களில் யாரையும் கிரிவலம் செல்ல அனுமதிப்பதில்லை.

    கிரிவலப்பாதையானது மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள 8 லிங்கங்களையும் பக்தர்கள் தரிசித்தபடி செல்கிறார்கள். கிரிவலம் செல்லும்போதே பக்தர்கள் பால், பன்னீர், மலர்கள், வில்வ இலைகளை வாங்கிச் செல்கிறார்கள். அந்த அபிஷேக பொருட்களை கொண்டு வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    கிரிவலப்பாதையில் தார்சாலையோ, சிமெண்டு சாலையோ கிடையாது. கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே. அதேபோல கிரிவலப்பாதையில் பல இடங்கள் மேடு, பள்ளமாகவும், கற்கள் படர்ந்தும் காணப்படும். அவற்றை பொருட்படுத்தாமலேயே பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். மலையை சுற்றி ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை உராய்ந்து வரும் தூய காற்று மருத்துவக்குணம் கொண்டது. அவற்றை முகர்ந்தபடியே பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மூலிகை மரங்களும் பக்தர்கள் அங்கு திரண்டு வர காரணமாக அமைந்துள்ளது. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் 3 முறை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் வந்தால் நிச்சயம் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். மனஅழுத்தம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிரிவலம் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கிரிவலம் சென்று வர நோய்கள் நீங்கும்.

    கிரிவலத்தின் சிறப்புகள்:

    உடல்நலம்: கிரிவலம் செல்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும், கால்களுக்கு பயிற்சி கிடைக்கும், மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    மனநலம்: கிரிவலம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியையும், நிம்மதியையும் தரும்.

    ஆன்மீக பலம்: கிரிவலம் செல்வதால் தெய்வத்தின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், மனத்தெளிவு பிறக்கும்.

    நன்மைகள்: கிரிவலம் செல்வதால் குடும்ப வாழ்வில் இன்பம், மாங்கல்ய பலம், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.

    • கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
    • மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

    சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.

    கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்

    பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

     

    சுயம்பு மூர்த்தி

    தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.

    ஏன் கொங்கு திருவண்ணாமலை

    இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    ஆலய அமைப்பு:

    கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

    குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 ஆண்டுகளாக கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது.
    • முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோவிலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உற்சவர் சாமி சிலையுடன் குளத்திற்குள் சென்று நீராடினர். அப்போது அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலிபோல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

    அவரை காப்பாற்ற முயன்ற அருகில் நின்ற 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.

    இதில் நங்கநல்லூரை சேர்ந்த வனேஷ் (வயது 19), புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    கோவில் குளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    பலியானவர்களில் வனேசும், ராகவனும் சி.ஏ.மாணவர்கள், ராகவ் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்தார். சூர்யா தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்தார். யோகேஸ்வரன் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பலியானவர்கள் தண்ணீரில் மூழ்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது. முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளும் உரிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு செல்லும் குளத்தின் முன்பகுதி கேட் மூடப்பட்டு உள்ளது. அதில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பங்குனி உத்திர விழா நடைபெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவில் நடை சாற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

    அதில், தவிர்க்க முடியாத காரணத்தால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

    கோவில் குளத்தில் 5 பேர் பலியான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    • தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார்.
    • தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.

    சென்னை:

    கோவில் குளத்தில் முழ்கி பலியான நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா(22) தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக இருந்தார். சினிமாவில் ஆர்வம் கொண்டு இருந்த அவர் சின்னத்திரையில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சினிமா ஆசையில் இருந்த அவரது கனவு தண்ணீரோடு மூழ்கி போய் உள்ளது. அவரது வீட்டில் நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தில் புன்சிரிப்புடன் இருக்கும் சூர்யாவின் காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்க செய்து உள்ளது.

    சூர்யா நேற்று காலை தர்மலிங்கேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு செல்வதாக தனது தாய் கீதாவிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது சூர்யாவை தாய் கீதா எச்சரித்தார். உனக்கு நீச்சல் தெரியாது... அதனால் நீ குளத்தில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். இதற்கு சூர்யா நான் தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று கூறி சென்று உள்ளார்.

    ஆனால் தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.

    இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை மிகவும் கலங்க வைத்து உள்ளது. எச்சரிக்கையையும் மீறி தண்ணீரில் மூழ்கி பலியான மகன் சூர்யாவின் நிலையை நினைத்து தாய் கீதா கண்ணீருடன் உள்ளார். அவருக்கு ஆறுதல் கூற வழியில்லாமல் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    இதுகுறித்து சூர்யாவின் தாய் கீதா கூறும்போது, தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை செய்து இருந்தேன். ஆனாலும் சூர்யா தண்ணீரில் இறங்கி மூழ்கி பலியாகிவிட்டான். நான் மட்டும் அங்கே இருந்திருந்தால் என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி இருப்பேன். கடைசியில் அந்தக் கடவுள் கூட என் மகனை காப்பாற்றவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    பட்டப்படிப்பு முடித்த சூர்யா சினிமாவில் அதிக ஆசை கொண்டு இருந்தாலும் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் தனது தந்தைக்கும் உதவியாக இருந்தார். வேலை இல்லாத சமயத்தில் தன்னுடைய தந்தைக்கு உதவி செய்வதிலும், உணவு ஆர்டர் கொடுத்தவர்களிடம் சரியான நேரத்தில் உணவுகளை  கொண்டு போய் சேர்ப்பதிலும் முழு உற்சாகமாகவும் ஈடுபாடோடும் செய்ததாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

    சூர்யாவின் அண்ணன் சந்தோஷ் கூறும்போது, நான் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது சூர்யா வெளியே சென்றான். சூர்யா இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை என்றார்.

    சூர்யாவின் பள்ளிகால நண்பர்கள் கூறும்போது, பங்குனி உற்சவம் தொடங்கிய நாள் முதல் சூர்யா மிகவும் பிசியாக இருந்தான். அவனை கடந்த ஒரு வாரமாக நாங்கள் சந்திக்கவில்லை. தற்போது அவன் இறந்து விட்டான் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. அவன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தான் என்றனர்.

    சூர்யாவின் மறைவு அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதேபோல் மடிப்பாக்கம் பாலையா கார்டனில் வசித்த என்ஜினீயரிங் பட்டதாரியான யோகேஸ்வரன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் ஆன்மீக சேவையில் எப்பொழுதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் பங்குனி உற்சவம் உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆன்மிக சேவையாற்றுவார் என்று இவருடைய நண்பர்கள்  சோகத்துடன் தெரிவித்தனர்.

    கல்லூரி மாணவர்களான வானேஷ், ராகவ், ராகவன் ஆகியோரும் எதிர்கால வாழ்க்கை குறித்து பல்வேறு கனவுகளுடன் இருந்தனர். அவர்களது வாழ்க்கையும் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி போய் விட்டது.

    ×