என் மலர்tooltip icon

    வழிபாடு

    தர்மலிங்கேஸ்வரர் கிரிவல பாதை ரகசியம்
    X

    தர்மலிங்கேஸ்வரர் கிரிவல பாதை ரகசியம்

    • திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது.
    • வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    திருவண்ணாமலைக்கு இணையான தலமாக கருதப்படுவது கோவை மாவட்டம் மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமியை வணங்கி கிரிவலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தான் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடிய இடமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

    கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது. திருவண்ணாமலையில் தினந்தோறும் கிரிவலம் செல்லலாம். ஆனால் இங்கு பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காரணமான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மற்ற நாட்களில் யாரையும் கிரிவலம் செல்ல அனுமதிப்பதில்லை.

    கிரிவலப்பாதையானது மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள 8 லிங்கங்களையும் பக்தர்கள் தரிசித்தபடி செல்கிறார்கள். கிரிவலம் செல்லும்போதே பக்தர்கள் பால், பன்னீர், மலர்கள், வில்வ இலைகளை வாங்கிச் செல்கிறார்கள். அந்த அபிஷேக பொருட்களை கொண்டு வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    கிரிவலப்பாதையில் தார்சாலையோ, சிமெண்டு சாலையோ கிடையாது. கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே. அதேபோல கிரிவலப்பாதையில் பல இடங்கள் மேடு, பள்ளமாகவும், கற்கள் படர்ந்தும் காணப்படும். அவற்றை பொருட்படுத்தாமலேயே பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். மலையை சுற்றி ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை உராய்ந்து வரும் தூய காற்று மருத்துவக்குணம் கொண்டது. அவற்றை முகர்ந்தபடியே பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மூலிகை மரங்களும் பக்தர்கள் அங்கு திரண்டு வர காரணமாக அமைந்துள்ளது. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் 3 முறை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் வந்தால் நிச்சயம் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். மனஅழுத்தம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிரிவலம் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கிரிவலம் சென்று வர நோய்கள் நீங்கும்.

    கிரிவலத்தின் சிறப்புகள்:

    உடல்நலம்: கிரிவலம் செல்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும், கால்களுக்கு பயிற்சி கிடைக்கும், மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    மனநலம்: கிரிவலம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியையும், நிம்மதியையும் தரும்.

    ஆன்மீக பலம்: கிரிவலம் செல்வதால் தெய்வத்தின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், மனத்தெளிவு பிறக்கும்.

    நன்மைகள்: கிரிவலம் செல்வதால் குடும்ப வாழ்வில் இன்பம், மாங்கல்ய பலம், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.

    Next Story
    ×