search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellai bus stand"

    • திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சந்திப்பு பஸ்நிலையம்

    அதன் ஒரு பகுதியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்காக ரூ.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது.

    உடனடியாக பணிகள் தொடங்கிய நிலையில் பள்ளம் தோண்டும்போது தண்ணீர் அதிக அளவு ஊறியதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    பின்னர் சுமார் ஓராண்டுக்கு பிறகு 2019-ம் ஆண்டு கடைசியில் பணிகள் மீண்டும் தொடங்கின. அங்கு தற்போது ஒரு பகுதி பணிகள் முடிவடைந்து உள்ளது.

    144 கடைகள்

    இந்த பஸ் நிலையத்தில் 144 கடைகளை உள்ளடக்கிய வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலமாக மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த 3 அடுக்கு வணிக வளாகங்களுக்கு கீழே 106 கார்கள், 1,629 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மழைக்காலத்தில் இந்த பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கும் என்பதால் அதனை சமாளிக்கும் வகையிலும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நவீன முறையில் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    காமிரா

    திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இது தவிர மேல் தளங்களுக்கு செல்வதற்காக தானியங்கி படிக்கட்டுகள், தேவையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும் பயணிகள் அமர்வதற்கு துருப்பிடிக்காத இருக்கைகள், 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள் வசதி, ஆங்காங்கே தொலைக்காட்சிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

    மாநகராட்சி ஏற்பாடு

    தற்போது ஒரு பகுதி பணி முடிவடைந்துள்ளதால் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது.

    அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது அதனை திறப்பதில் சாத்தியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காதல் ஜோடியை மிரட்டி வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றிய காதல் ஜோடியை மிரட்டி, பஸ் நிலையத்தில் சுற்றிய மற்றொரு வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக் தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    பாளை அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது23). இவர் சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பம்மல் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும், விஜய்க்கும் காதல் அரும்பியது. சமீபத்தில் பிளஸ்-2 தேர்வுகள் அனைத்தும் முடிந்ததால், விஜய் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி, தனது சொந்த ஊரான அடைமிதிப்பான் குளத்திற்கு கடத்தி வந்தார்.

    இங்குள்ள விஜயின் பெற்றோரும், உறவினர்களும், மாணவிக்கு 17 வயதே ஆவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், உடனடியாக மாணவியை சென்னையில் உள்ள அவரது பெற்றோரிடம் சேர்த்து விடும்படியும் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

    இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் நேற்று முன்தினம் இரவு விஜயும், அவரது காதலியும் புதிய பஸ் நிலையத்தில் சுற்றி சுற்றி வந்தது தெரியவந்தது. அப்போது தான் பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் போலீஸ் என்று கூறி அந்த மாணவியை கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் மாணவியை கடத்தி செல்லவில்லை என்றும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைக்க நினைத்தேன் என்றும் கூறியதால் அவரை விடுவித்தனர்.

    இந்த நிலையில் மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் மாணவியையும், அவரை கடத்தி வந்த வாலிபர் விஜயையும், பம்மல் போலீசில் ஒப்படைக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலபாட்டம் கிராமத்தை அடுத்த கொட்டாரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வினோத் (வயது30). மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் வாசுதேவன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி- மகனை பிரிந்து மும்பை சென்று விட்டார்.

    இதனால் வருமானம் இன்றி தவித்த வாசுதேவனின் மனைவியும் எங்கோ சென்று விட்டார். இதனால் வீடு இன்றி தவித்த வினோத் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். தினமும் இரவில் பஸ் நிலையத்தில் உள்ள ஏதாவது ஒரு கடையின் முன் படுத்து தூங்குவார்.

    நேற்று இரவு இவர் மது குடித்து விட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு வாசல் அருகே உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த மர்ம கும்பல், இரும்பு கம்பியால் அவரை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமானார்.

    இன்று காலை அந்த பகுதி வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது, அங்கு வினோத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றனர்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் பொதுவாக பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் மிரட்டி பணத்தை அபகரித்து, மது குடிப்பதும், கஞ்சா அடிப்பதுமாக இருந்துள்ளார். அவர்களிடம் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பஸ் நிலையத்துக்கு வரும் அப்பாவி பயணிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் பஸ் நிலைய பகுதிகளில் வழக்கமாக படுத்து தூங்கும் பிச்சைக் காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் பிச்சைக்காரர்களிடம் பணத்தை அபகரித்து மது குடித்து வந்ததால், சில பிச்சைக்காரர்களே சேர்ந்து வினோத்தை கொலை செய்து இருக்கலாமா? அல்லது அவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×